All Surahs

Surah 24

النور

An-Nur

24. ஸூரத்துந் நூர் (பேரொளி)

64 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِیْهَاۤ اٰیٰتٍ بَیِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟

இது ஓர் அத்தியாயம்; இதனை நாம் இறக்கியருளினோம். இதனை நாம் விதியாக்கியிருக்கின்றோம். மேலும், இதில் தெளிவான கட்டளைகளையும் நாம் இறக்கியிருக்கின்றோம். (இதனால்) நீங்கள் பாடம் பெறக்கூடும்!

2

اَلزَّانِیَةُ وَالزَّانِیْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۪ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِیْ دِیْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ۚ وَلْیَشْهَدْ عَذَابَهُمَا طَآىِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟

விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும்.

3

اَلزَّانِیْ لَا یَنْكِحُ اِلَّا زَانِیَةً اَوْ مُشْرِكَةً ؗ وَّالزَّانِیَةُ لَا یَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذٰلِكَ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟

விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண் ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண் ணையோ தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டாம். விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இறைவனுக்கு இணை வைப்பவனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இது இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.

4

وَالَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ یَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِیْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟ۙ

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள்.

5

اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

ஆனால், எவர்கள் இந்தக் குற்றத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! அல்லாஹ் அவசியம் (அவர்கள் விஷயத்தில்) அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

6

وَالَّذِیْنَ یَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ یَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟

ஆனால், யார் தம்முடைய மனைவியர் மீது அவதூறு சுமத்துகின்றார்களோ மேலும், அதற்குத் தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும்.

7

وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَیْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِیْنَ ۟

மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்!’ என்று கூற வேண்டும்.

8

وَیَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۙ

‘இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்’ என்று அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி,

9

وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَیْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

ஐந்தாவது தடவை இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்று அவள் அளிக்கும் சாட்சியம், அவளைவிட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும்.

10

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِیْمٌ ۟۠

உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்து, மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இல்லாதிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்திவிட்டிருக்கும்!)

11

اِنَّ الَّذِیْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ ؕ بَلْ هُوَ خَیْرٌ لَّكُمْ ؕ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ ۚ وَالَّذِیْ تَوَلّٰی كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِیْمٌ ۟

இந்த அவதூறைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் உள்ள ஒரு கும்பல்தான். இந்நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள். மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது! அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ அந்த அளவுக்குப் பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது.

12

لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَیْرًا ۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِیْنٌ ۟

நீங்கள் இதனைச் செவியுற்ற போதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி ஏன் நல்லெண்ணம் கொள்ளவில்லை? இது ஓர் ‘அப்பட்டமான அவதூறு’ என்று ஏன் அவர்கள் கூறிடவில்லை?

13

لَوْلَا جَآءُوْ عَلَیْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ ۚ فَاِذْ لَمْ یَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ ۟

அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) ஏன் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லை? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர்களே பொய்யர்கள் ஆவர்.

14

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِیْ مَاۤ اَفَضْتُمْ فِیْهِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۚۖ

உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் பொழிந்திருக்கா விட்டால் எந்த விஷயங்களில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் பயனாக உங்களுக்குப் பெரும் வேதனை ஏற்பட்டிருக்கும். உங்களில், ஒருவரின் நாவிலிருந்து மற்றவரின் நாவுக்கு இந்த அவதூறுச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவறைச் செய்து கொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்று சிந்தியுங்கள்!

15

اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَیِّنًا ۖۗ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِیْمٌ ۟

நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதனைச் சாதாரணமாகக் கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப்பெரிய விஷயமாய் இருந்தது.

16

وَلَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا ۖۗ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِیْمٌ ۟

நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, “இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதல்ல; ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று ஏன் நீங்கள் கூறிடவில்லை?

17

یَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ

நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒருபோதும் இதுபோன்ற தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான்.

18

وَیُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

மேலும், அல்லாஹ் உங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் நன்கு அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆவான்.

19

اِنَّ الَّذِیْنَ یُحِبُّوْنَ اَنْ تَشِیْعَ الْفَاحِشَةُ فِی الَّذِیْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை.

20

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠

அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது பொழிந்திராவிட்டால், மேலும், அல்லாஹ் மிகுந்த பரிவு கொண்டவனாயும் கிருபையாளனாயும் இல்லாதிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்)!

21

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ وَمَنْ یَّتَّبِعْ خُطُوٰتِ الشَّیْطٰنِ فَاِنَّهٗ یَاْمُرُ بِالْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰی مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰكِنَّ اللّٰهَ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான். அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவருமே ஒருபோதும் மாசற்றவராய் விளங்கியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களைத் தூய்மையாக்குகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

22

وَلَا یَاْتَلِ اُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ یُّؤْتُوْۤا اُولِی الْقُرْبٰی وَالْمَسٰكِیْنَ وَالْمُهٰجِرِیْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۪ۖ وَلْیَعْفُوْا وَلْیَصْفَحُوْا ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

உங்களிடையே பண்பு நலன்களும், வசதிகளும் உடையவர்கள், ‘தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்குக் கொடுத்துதவ மாட்டோம்’ என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்து விட வேண்டும்; பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா என்ன? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

23

اِنَّ الَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۪ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ

கற்புடைய, கள்ளங்கபடமற்ற, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர்கள் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது.

24

یَّوْمَ تَشْهَدُ عَلَیْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அவர்கள் செய்த தீவினைகளைக் குறித்து அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும், கால்களும் எந்நாளில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் கூறுமோ அந்த நாளினை அவர்கள் மறந்துவிட வேண்டாம்.

25

یَوْمَىِٕذٍ یُّوَفِّیْهِمُ اللّٰهُ دِیْنَهُمُ الْحَقَّ وَیَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِیْنُ ۟

அந்நாளில் அவர்களுக்குரிய நியாயமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு நிறைவாக அளிப்பான். மேலும், அவர்களுக்குத் தெரிந்துவிடும்; அல்லாஹ்தான் உண்மையானவன்; உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன் என்று!

26

اَلْخَبِیْثٰتُ لِلْخَبِیْثِیْنَ وَالْخَبِیْثُوْنَ لِلْخَبِیْثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَالطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا یَقُوْلُوْنَ ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟۠

ஒழுக்கங்கெட்ட பெண்கள், ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்கும், ஒழுக்கங்கெட்ட ஆண்கள், ஒழுக்கங்கெட்ட பெண்களுக்கும் உரியவர்களாவர். தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்களுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் உரியவர்களாவர். புனைந்து உரைப்போரின் பழிச்சொற்களிலிருந்து அவர்களின் பண்பாடு தூய்மையானது. அவர்களுக்குப் பாவமன்னிப்பும் நற்பேறும் இருக்கின்றன.

27

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் கூறாத வரையிலும் நுழையாதீர்கள். இந்த வழிமுறைதான் உங்களுக்கு மிகச்சிறப்புடையதாகும். நீங்கள் இதனை நினைவில் வைப்பீர்கள் என எதிர்பார்க்கலாம்.

28

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِیْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰی یُؤْذَنَ لَكُمْ ۚ وَاِنْ قِیْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰی لَكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟

ஆனால், அங்கு எவரையும் நீங்கள் காணவில்லையென்றால், உங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத வரையில் அங்கே நுழையாதீர்கள். மேலும், உங்களிடம் “திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறப்பட்டால், உடனே திரும்பிவிடுங்கள். இதுவே, உங்களுக்கு மிகத் தூய்மையான நடைமுறையாகும். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.

29

لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ مَسْكُوْنَةٍ فِیْهَا مَتَاعٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟

ஆயினும் யாரும் குடியிருக்காத உங்களுக்குப் பலன் தரக்கூடிய ஏதாவது பொருள்கள் உள்ள வீடுகளில் நுழைவதில் உங்கள் மீது யாதொரு தவறுமில்லை. நீங்கள் வெளிப்படுத்துபவை மற்றும் மறைத்து வைப்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்!

30

قُلْ لِّلْمُؤْمِنِیْنَ یَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَیَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰلِكَ اَزْكٰی لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا یَصْنَعُوْنَ ۟

(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்.

31

وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَیَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ ۪ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَی اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும்.

32

وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும், உங்களுடைய ஆண்பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாயிருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை தனவந்தர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

33

وَلْیَسْتَعْفِفِ الَّذِیْنَ لَا یَجِدُوْنَ نِكَاحًا حَتّٰی یُغْنِیَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَالَّذِیْنَ یَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِیْهِمْ خَیْرًا ۖۗ وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِیْۤ اٰتٰىكُمْ ؕ وَلَا تُكْرِهُوْا فَتَیٰتِكُمْ عَلَی الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَمَنْ یُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

திருமணத்திற்குரிய வசதி வாய்ப்பைப் பெறாதவர்கள் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்வரை ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளட்டும். உங்களுடைய அடிமைகளில் எவர்கள் ‘முகாத்தபத்’* கோருகின்றார்களோ அவர்களிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களோடு ‘முகாத்தபத்’ செய்து கொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

34

وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟۠

மேலும், நாம் தெள்ளத்தெளிவாக வழிகாட்டும் வசனங்களை உங்களுக்கு அருளி இருக்கின்றோம்; உங்களுக்கு முன் சென்ற சமூகங்களின் (படிப்பினை மிக்க) உதாரணங்களையும் நாம் உங்கள் முன் வைத்துள்ளோம். மேலும், இறையச்சம் கொள்ளக் கூடியவர்களுக்குப் பயனளிக்கும் நல்லுரைகளையும் நாம் வழங்கியுள்ளோம்.

35

اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِیْهَا مِصْبَاحٌ ؕ اَلْمِصْبَاحُ فِیْ زُجَاجَةٍ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّیٌّ یُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَیْتُوْنَةٍ لَّا شَرْقِیَّةٍ وَّلَا غَرْبِیَّةٍ ۙ یَّكَادُ زَیْتُهَا یُضِیْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ؕ نُوْرٌ عَلٰی نُوْرٍ ؕ یَهْدِی اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟ۙ

அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்; ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டினுள் இருக்கிறது; அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத, அருள் பெற்ற ஒலிவ மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது. அதன் எண்ணெய் தானாக ஒளிரவே செய்யும்; நெருப்பு அதனைத் தீண்டாத போதிலும்! (இவ்வாறு) ஒளிக்கு மேல் ஒளி (அதிகமாவதற்கான அனைத்துக் காரணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன.) அல்லாஹ் தான் நாடுவோர்க்கு தன்னுடைய ஒளியின் பக்கம் வழிகாட்டுகின்றான். அவன் உவமைகளின் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை விளக்குகின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

36

فِیْ بُیُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَیُذْكَرَ فِیْهَا اسْمُهٗ ۙ یُسَبِّحُ لَهٗ فِیْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟ۙ

(அவனது ஒளியின்பால் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப்படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவுகூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காணப்படுகிறார்கள். அவற்றில் காலை, மாலை நேரங்களில் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள்.

37

رِجَالٌ ۙ لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۗۙ

எத்தகையோர் எனில், இறைவனை நினைவுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொள்வினை கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

38

لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

(அவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால்) அவர்கள் செய்த மிக அழகிய செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு அருள்வதற்காகவும் அவனுடைய அருளால் இன்னும் அதிகமாக அவர்களுக்கு வழங்குவதற்காகவும்தான்! மேலும், அல்லாஹ் தான் நாடுவோர்க்கு கணக்கின்றி வழங்குகின்றான்.

39

وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۭ بِقِیْعَةٍ یَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤی اِذَا جَآءَهٗ لَمْ یَجِدْهُ شَیْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ؕ وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟ۙ

(இதற்கு மாறாக) எவர்கள் இறைவனை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கு உவமை (நீரில்லாப்) பாலைவனத்தின் கானலாகும். தாகித்தவன் அதனை நீர் என்று கருதுகின்றான். இறுதியில் அவன் அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கு எதையும் காணவில்லை. ஆனால், அவன் அங்கு கண்டுகொண்டது அல்லாஹ்வை! அல்லாஹ்வோ அவனுக்குரிய கணக்கை முழுமையாகத் தீர்த்துவிடுகின்றான். அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான்.

40

اَوْ كَظُلُمٰتٍ فِیْ بَحْرٍ لُّجِّیٍّ یَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ ؕ ظُلُمٰتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ ؕ اِذَاۤ اَخْرَجَ یَدَهٗ لَمْ یَكَدْ یَرٰىهَا ؕ وَمَنْ لَّمْ یَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ۟۠

அல்லது (நிராகரிப்பாளர்களின் செயல்கள்) ஆழ்கடலில் இருள்களைப் போன்று உள்ளன. அந்தக் கடலை ஓர் அலை மூடியுள்ளது; அதற்கு மேல் மற்றொரு அலை; அதற்கு மேல் மேகம்! (இப்படியாக) இருளுக்கு மேல் இருள் என எங்கும் இருள்மயம்! மனிதன் தனது கையை நீட்டினால் அதைக்கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை வழங்கவில்லையோ பிறகு அவனுக்கு வேறு எந்த ஒளியுமில்லை!

41

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّیْرُ صٰٓفّٰتٍ ؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِیْحَهٗ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும், சிறகடித்துப் பறக்கும் பறவைகளும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஒவ்வொன்றும் தன்னுடைய தொழுகையையும் துதிமுறையையும் அறிந்திருக்கின்றது. மேலும், இவை செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

42

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟

வானங்கள் மற்றும் பூமியுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது!

43

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ فَیُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ وَیَصْرِفُهٗ عَنْ مَّنْ یَّشَآءُ ؕ یَكَادُ سَنَا بَرْقِهٖ یَذْهَبُ بِالْاَبْصَارِ ۟ؕ

நீங்கள் பார்க்கவில்லையா என்ன? அல்லாஹ் மேகத்தை மெல்ல மெல்ல நகர்த்துகின்றான். பின்னர், அதன் சிதறல்களை ஒன்றிணைக்கின்றான். பிறகு அதனை அடர்த்தியான மேகமாக ஆக்குகின்றான். பிறகு, அதற்கிடையிலிருந்து மழைத்துளிகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நீர் பார்க்கின்றீர். மேலும், அவன் வானத்திலிருந்து அதிலே உயர்ந்து நிற்கின்ற மலைகளின் காரணத்தால் பனிக்கட்டிகளைப் பொழிவிக்கின்றான். பிறகு, அதன் மூலம், தான் நாடுகின்றவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களை அதிலிருந்து காப்பாற்றிக்கொள்கின்றான். அதனுடைய மின்னலின் ஒளி, பார்வைகளைப் பறிக்க முனைகின்றது.

44

یُقَلِّبُ اللّٰهُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟

இரவையும் பகலையும் அவன்தான் மாற்றிக் கொண்டிருக்கின்றான். திண்ணமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது, பார்வை உள்ளவர்களுக்கு!

45

وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ۚ فَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی بَطْنِهٖ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی رِجْلَیْنِ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰۤی اَرْبَعٍ ؕ یَخْلُقُ اللّٰهُ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

மேலும், அல்லாஹ் ஒவ்வோர் உயிர்பிராணியையும் ஒரேவிதமான நீரிலிருந்து படைத்தான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. வேறு சில இரு கால்களால் நடந்து செல்கின்றன; இன்னும் சில நான்கு கால்களால் நடந்து திரிகின்றன. தான் நாடுகின்றவற்றை அல்லாஹ் படைக்கின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.

46

لَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

உண்மையை மிகத்தெளிவாகக் காண்பிக்கும் வசனங்களை நாம் இறக்கியருளியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழியின் பக்கம் வழிகாட்டுகின்றான்.

47

وَیَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟

“அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டோம்” என்று இவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் இதன்பின்னர், இவர்களில் ஒரு பிரிவினர் (கீழ்ப்படியாமல்) புறக்கணித்து விடுகின்றார்கள். இத்தகையோர் எவ்வகையிலும் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

48

وَاِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ ۟

அவர்களுக்கிடையிலான வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பளித்திட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அவர்கள் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு சாரார் புறக்கணித்துச் செல்கின்றார்கள்.

49

وَاِنْ یَّكُنْ لَّهُمُ الْحَقُّ یَاْتُوْۤا اِلَیْهِ مُذْعِنِیْنَ ۟ؕ

ஆனால் நியாயம் அவர்களுக்கு சாதகமாக அமையும்போது தாழ்மையோடு இறைத்தூதரிடம் வருகின்றார்கள்.

50

اَفِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ یَخَافُوْنَ اَنْ یَّحِیْفَ اللّٰهُ عَلَیْهِمْ وَرَسُوْلُهٗ ؕ بَلْ اُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟۠

அவர்களின் உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி தொற்றிக் கொண்டுள்ளதா? அல்லது அவர்கள் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநீதி இழைத்திடுவார்களோ என்று அஞ்சுகின்றார்களா? உண்மை என்னவெனில், இவர்களே கொடுமையாளர்கள் ஆவர்.

51

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِیْنَ اِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اَنْ یَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கிடையிலுள்ள வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அழைக்கப்படும்போது, “நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்!” என்று கூறுவதே அவர்களின் தன்மையாகும். இத்தகையோர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்.

52

وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَخْشَ اللّٰهَ وَیَتَّقْهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟

எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்.

53

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَیَخْرُجُنَّ ؕ قُلْ لَّا تُقْسِمُوْا ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟

(நயவஞ்சகர்களாகிய) இவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து, “தாங்கள் எங்களுக்கு ஆணையிட்டால் வீடுகளை விட்டு வெளியேறிவிடுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கூறும்: “சத்தியம் செய்யாதீர்கள். உங்களுடைய கீழ்ப்படிதல் எத்தகையது என்பது தெரிந்த விஷயம்தான்! திண்ணமாக நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் அறியாதவன் அல்லன்!”

54

قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْهِ مَا حُمِّلَ وَعَلَیْكُمْ مَّا حُمِّلْتُمْ ؕ وَاِنْ تُطِیْعُوْهُ تَهْتَدُوْا ؕ وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟

நீர் கூறும்: “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும், தூதரைப் பின்பற்றுபவராய்த் திகழுங்கள்; ஆயினும், நீங்கள் புறக்கணித்தால் (நன்கு புரிந்து கொள்ளுங்கள்!) தூதரின் மீது எந்தக் கடமை சுமத்தப்பட்டுள்ளதோ, அந்தக் கடமைக்கு அவரே பொறுப்பு; உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைக்கு பொறுப்பு நீங்களே! நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிவீர்களாயின், நீங்கள்தாம் நேர்வழியடைவீர்கள். (இல்லையெனில் கட்டளைகளைத்) தெள்ளத் தெளிவாக அறிவித்துவிடுவதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை.

55

وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪ وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟

உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்று போன மக்களைப் பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாய் மாற்றித் தருவான். எனவே, அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும், என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும். மேலும், இதன் பின்னர் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர்.

56

وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟

மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தையும் வழங்குங்கள். மேலும், தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்; உங்கள் மீது கருணை புரியப்படக் கூடும்.

57

لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۚ وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ وَلَبِئْسَ الْمَصِیْرُ ۟۠

நிராகரித்துக் கொண்டிருப்பவர்களைக் குறித்து, அவர்கள் பூமியில் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்துவிடுவார்கள் என்று தப்பெண்ணம் கொள்ளாதீர்கள். அவர்களுடைய இருப்பிடம் நரகம்தான்; அது மிகவும் கெட்ட இருப்பிடமாகும்.

58

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِیَسْتَاْذِنْكُمُ الَّذِیْنَ مَلَكَتْ اَیْمَانُكُمْ وَالَّذِیْنَ لَمْ یَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِیْنَ تَضَعُوْنَ ثِیَابَكُمْ مِّنَ الظَّهِیْرَةِ وَمِنْ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ؕ۫ ثَلٰثُ عَوْرٰتٍ لَّكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ وَلَا عَلَیْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ؕ طَوّٰفُوْنَ عَلَیْكُمْ بَعْضُكُمْ عَلٰی بَعْضٍ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும் பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும் மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளட்டும். வைகறை தொழுகைக்கு முன்னர்; மதியவேளையில் நீங்கள் உங்கள் ஆடைகளைக் களைந்திருக்கும்போது; இஷா தொழுகைக்குப் பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்கக்கூடிய நேரங்களாகும். இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் அனுமதியின்றி வருவார்களாயின் உங்கள்மீதும், அவர்கள் மீதும் எவ்விதக் குற்றமுமில்லை. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி வரவேண்டியுள்ளது. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய அறிவுரைகளைத் தெளிவுபடுத்துகின்றான். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

59

وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْیَسْتَاْذِنُوْا كَمَا اسْتَاْذَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

மேலும், உங்கள் சிறுவர்கள் விவரம் தெரியும் பருவத்தை அடைந்து விட்டால், அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களிடம் விவரிக்கின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

60

وَالْقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیْ لَا یَرْجُوْنَ نِكَاحًا فَلَیْسَ عَلَیْهِنَّ جُنَاحٌ اَنْ یَّضَعْنَ ثِیَابَهُنَّ غَیْرَ مُتَبَرِّجٰتٍ بِزِیْنَةٍ ؕ وَاَنْ یَّسْتَعْفِفْنَ خَیْرٌ لَّهُنَّ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

எந்தப் பெண்கள் இளமைப் பருவத்தைக் கடந்து திருமணத்தில் விருப்பம் இல்லாதவர்களாய் இருந்துவிடுகின்றார்களோ அந்தப் பெண்கள் தங்கள் அழகை வெளிக்காட்டாதவர்களாய், தங்கள் மேலாடைகளைக் கழற்றி வைப்பதில் அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை; ஆயினும், அவர்களும் நாணமுள்ள பெண்களாய் நடந்து கொள்வதே அவர்களுக்கு மிக ஏற்றதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

61

لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ وَّلَا عَلٰۤی اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْ بُیُوْتِكُمْ اَوْ بُیُوْتِ اٰبَآىِٕكُمْ اَوْ بُیُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُیُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُیُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُیُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُیُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِیْقِكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِیْعًا اَوْ اَشْتَاتًا ؕ فَاِذَا دَخَلْتُمْ بُیُوْتًا فَسَلِّمُوْا عَلٰۤی اَنْفُسِكُمْ تَحِیَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَیِّبَةً ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠

குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆனால், நீங்கள் உங்களின் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளிலோ, உங்கள் அன்னையரின் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது உங்கள் சிறிய தந்தை பெரிய தந்தையரின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் சிற்றன்னை, பெரியன்னையரின் வீடுகளிலோ அல்லது எந்த வீடுகளின் திறவுகோல்கள் உங்கள் பொறுப்பில் உள்ளனவோ அந்த வீடுகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வீடுகளிலோ சாப்பிடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவதிலும் உங்கள் மீது குற்றமில்லை. எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும்போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் இறைவனிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதும், பாக்கியங்கள் கொண்டதும், தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்தித்துணர்ந்து செயல்படக்கூடும்!

62

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰۤی اَمْرٍ جَامِعٍ لَّمْ یَذْهَبُوْا حَتّٰی یَسْتَاْذِنُوْهُ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களும், மேலும், ஏதேனுமொரு பொதுப் பணிக்காக அவர்கள் இறைத்தூதருடன் இருக்கும்போது அவரிடம் அனுமதி பெறாமல் அவரை விட்டுப் பிரிந்து போகாத வர்களுமே உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். (நபியே!) உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்டவர்கள். எனவே, அவர்கள் தங்களுடைய ஏதேனும் தேவைக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி வழங்குவீராக! மேலும், இத்தகையோருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவீராக! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னித்தருள்பவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

63

لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَیْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ قَدْ یَعْلَمُ اللّٰهُ الَّذِیْنَ یَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْیَحْذَرِ الَّذِیْنَ یُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِیْبَهُمْ فِتْنَةٌ اَوْ یُصِیْبَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

(முஸ்லிம்களே!) உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். இறைத்தூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை நேர்ந்துவிடுமோ, தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடுமோ என்று அஞ்சட்டும்!

64

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قَدْ یَعْلَمُ مَاۤ اَنْتُمْ عَلَیْهِ ؕ وَیَوْمَ یُرْجَعُوْنَ اِلَیْهِ فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

அறிந்து கொள்ளுங்கள்! வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதனையும் அல்லாஹ் அறிகின்றான். மக்கள் அவனிடம் திரும்பக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் என்னவெல்லாம் செய்(துவிட்டு வந்)திருக்கின்றார்கள் என்பதை அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

PreviousAl-MuminunNextAl-Furqan

0:00–:––