All Surahs

Surah 34

سبأ

Saba

34. ஸூரத்துஸ் ஸபா

54 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَلَهُ الْحَمْدُ فِی الْاٰخِرَةِ ؕ وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟

வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மேலும், மறுமையிலும்கூட புகழ் அவனுக்கே உரித்தானது. அவன் நுண்ணறிவாளனாகவும், யாவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

2

یَعْلَمُ مَا یَلِجُ فِی الْاَرْضِ وَمَا یَخْرُجُ مِنْهَا وَمَا یَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعْرُجُ فِیْهَا ؕ وَهُوَ الرَّحِیْمُ الْغَفُوْرُ ۟

பூமியினுள் செல்பவற்றையும் அதிலிருந்து வெளிப்படுபவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும் அதில் ஏறுகின்றவற்றையும் ஆக எல்லாவற்றையும் அவன் நன்கறிகின்றான். அவன் தனிப்பெருங் கிருபையாளனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.

3

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَاْتِیْنَا السَّاعَةُ ؕ قُلْ بَلٰی وَرَبِّیْ لَتَاْتِیَنَّكُمْ ۙ عٰلِمِ الْغَیْبِ ۚ لَا یَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟ۗۙ

“மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.”

4

لِّیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟

மேலும், இந்த மறுமை வருவதுநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.

5

وَالَّذِیْنَ سَعَوْ فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟

எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச்செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கிறது.

6

وَیَرَی الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَقَّ ۙ وَیَهْدِیْۤ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟

(நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள்.

7

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا هَلْ نَدُلُّكُمْ عَلٰی رَجُلٍ یُّنَبِّئُكُمْ اِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ ۙ اِنَّكُمْ لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ۟ۚ

நிராகரிப்பாளர்கள் (மக்களிடம்) கூறுகின்றார்கள்: “(நீங்கள் மரணமாகி) உங்கள் உடல் அணு அணுவாய் சிதைந்து போய்விட்ட பிறகு நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களுக்குச் செய்தி அறிவிக்கும் ஒருவரை நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தரவா?”

8

اَفْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَمْ بِهٖ جِنَّةٌ ؕ بَلِ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ فِی الْعَذَابِ وَالضَّلٰلِ الْبَعِیْدِ ۟

“இந்த மனிதர் அல்லாஹ்வின் பெயரால் பொய்யைப் புனைந்து கூறுகின்றாரா? அல்லது இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றதா என்பது புரியவில்லையே!” இல்லை, உண்மையில், மறுமையை நம்பாதவர்கள்தாம் வேதனைக்கு ஆளாகப் போகிறார்கள். மேலும், மிக மோசமாக வழிகெட்டுப் போனவர்களும் அவர்கள்தாம்!

9

اَفَلَمْ یَرَوْا اِلٰی مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ اِنْ نَّشَاْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَیْهِمْ كِسَفًا مِّنَ السَّمَآءِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟۠

இவர்கள் தங்களுக்கு முன்னாலும் பின்னாலும் சூழ்ந்துள்ள வானத்தையும் பூமியையும் என்றுமே பார்த்ததில்லையா, என்ன? நாம் நாடினால் இவர்களைப் பூமிக்கடியில் ஆழ்த்தியிருப்போம். அல்லது வானத்தின் சில துண்டுகளை இவர்கள் மீது விழச் செய்திருப்போம். இறைவன் பக்கம் திரும்புகின்ற ஒவ்வோர் அடியானுக்கும் உண்மையில் இதில் ஒரு சான்று இருக்கிறது.

10

وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ یٰجِبَالُ اَوِّبِیْ مَعَهٗ وَالطَّیْرَ ۚ وَاَلَنَّا لَهُ الْحَدِیْدَ ۟ۙ

நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) “மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம்.

11

اَنِ اعْمَلْ سٰبِغٰتٍ وَّقَدِّرْ فِی السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًا ؕ اِنِّیْ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

“போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக” என்ற கட்டளையுடன்! (தாவூதுடைய வழித்தோன்றல்களே!) நற்செயல்கள் புரியுங்கள்; நீங்கள் செய்வதனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

12

وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌ ۚ وَاَسَلْنَا لَهٗ عَیْنَ الْقِطْرِ ؕ وَمِنَ الْجِنِّ مَنْ یَّعْمَلُ بَیْنَ یَدَیْهِ بِاِذْنِ رَبِّهٖ ؕ وَمَنْ یَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِیْرِ ۟

மேலும், நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்; மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும். நாம் அவருக்காக உருகிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம். மேலும், ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன. அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்.

13

یَعْمَلُوْنَ لَهٗ مَا یَشَآءُ مِنْ مَّحَارِیْبَ وَتَمَاثِیْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِیٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِیْلٌ مِّنْ عِبَادِیَ الشَّكُوْرُ ۟

அந்த ஜின்கள் ஸுலைமானுக்காக அவர் விரும்பியவை அனைத்தையும் உயர்ந்த மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகத்தையொத்த பெரிய தட்டுகளையும், இருப்பிடத்தை விட்டகலாத பெரும் அண்டாக்களையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள். என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர்தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்.

14

فَلَمَّا قَضَیْنَا عَلَیْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰی مَوْتِهٖۤ اِلَّا دَآبَّةُ الْاَرْضِ تَاْكُلُ مِنْسَاَتَهٗ ۚ فَلَمَّا خَرَّ تَبَیَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا یَعْلَمُوْنَ الْغَیْبَ مَا لَبِثُوْا فِی الْعَذَابِ الْمُهِیْنِ ۟ؕ

பிறகு நாம் ஸுலைமான் மீது மரணத்தை விதித்தபோது, அவருடைய கைத்தடியைத் தின்றுகொண்டிருந்த கரையான்களைத் தவிர வேறெதுவும் அவருடைய மரணத்தைப் பற்றி அந்த ஜின்களுக்கு அறிவித்துக்கொடுக்கவில்லை. இவ்வாறு ஸுலைமான் கீழே சாய்ந்ததும் ஜின்களுக்குப் புலப்பட்டது. மறைவானவற்றை அவர்கள் அறிபவர்களாய் இருந்திருந்தால் இழிவுதரும் இவ்வேதனையில் அவர்கள் சிக்கியிருந்திருக்க மாட்டார்களே!

15

لَقَدْ كَانَ لِسَبَاٍ فِیْ مَسْكَنِهِمْ اٰیَةٌ ۚ جَنَّتٰنِ عَنْ یَّمِیْنٍ وَّشِمَالٍ ؕ۬ كُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ ؕ بَلْدَةٌ طَیِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ ۟

ஸபஃ சமுதாயத்தினர்க்கு அவர்கள் வசித்த இடத்திலேயே ஒரு சான்று இருந்தது. வலப்புறமும் இடப்புறமும் இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள், உங்கள் இறைவன் வழங்கிய உணவை! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். நாடோ நன்கு தூய்மையாக இருக்கிறது. படைத்த இறைவனோ பெரும் மன்னிப்பாளனாக இருக்கின்றான்.

16

فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَیْهِمْ سَیْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَیْهِمْ جَنَّتَیْنِ ذَوَاتَیْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَیْءٍ مِّنْ سِدْرٍ قَلِیْلٍ ۟

ஆயினும், அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே, அவர்கள் மீது அணை உடைத்து ஓடும் வெள்ளத்தை நாம் அனுப்பினோம். மேலும், அவர்களுடைய (முந்தைய) இரு தோட்டங்களுக்குப் பகரமாக வேறு இரு தோட்டங்களைக் கொடுத்தோம். அவற்றில் கசப்பான காய்களும், காற்றாடி மரங்களும் இன்னும் மிகச் சில இலந்தை மரங்களுமே இருந்தன.

17

ذٰلِكَ جَزَیْنٰهُمْ بِمَا كَفَرُوْا ؕ وَهَلْ نُجٰزِیْۤ اِلَّا الْكَفُوْرَ ۟

இதுவே அவர்கள் நிராகரித்ததற்குப் பகரமாக நாம் வழங்கிய கூலியாகும். மேலும், நன்றி கொல்லும் மனிதர்களுக்கே அன்றி வேறெவருக்கும் நாம் இத்தகைய கூலி கொடுப்பதில்லை.

18

وَجَعَلْنَا بَیْنَهُمْ وَبَیْنَ الْقُرَی الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا قُرًی ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِیْهَا السَّیْرَ ؕ سِیْرُوْا فِیْهَا لَیَالِیَ وَاَیَّامًا اٰمِنِیْنَ ۟

மேலும், அவர்களுக்கும் நாம் அருட்பேறுகள் வழங்கியிருந்த ஊர்களுக்குமிடையில் எல்லோருக்கும் தெரியும்படியான ஊர்களை அமைத்திருந்தோம். அவற்றில் பயணத்தூரத்தை அளவிட்டு நிர்ணயித்திருந்தோம். “பயணம் செய்யுங்கள் இவ்வழிகளினூடே; இரவு பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய்!”

19

فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَیْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِیْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟

ஆயினும், அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களின் பயணத் தூரத்தை நீளமாக்கித் தருவாயாக!” அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்தார்கள். இறுதியில் அவர்களை நாம் வெறும் பழங்கதைகளாக்கி விட்டோம். அவர்களை முற்றிலும் சின்னாபின்னமாக்கிச் சிதறடித்து விட்டோம். ஒவ்வொரு பொறுமைசாலிக்கும் நன்றி உடையவர்க்கும் இதில் திண்ணமாக சான்றுகள் இருக்கின்றன.

20

وَلَقَدْ صَدَّقَ عَلَیْهِمْ اِبْلِیْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟

அவர்களின் விவகாரத்தில் இப்லீஸ் தன் எண்ணம் சரியாக நிறைவேறக் கண்டான். மேலும், அவர்கள் அவனையே பின்பற்றினார்கள், இறைநம்பிக்கையாளர்களின் ஒரு சிறு பிரிவினரைத் தவிர!

21

وَمَا كَانَ لَهٗ عَلَیْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ یُّؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِیْ شَكٍّ ؕ وَرَبُّكَ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟۠

இப்லீசுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இருக்கவில்லை. ஆனால் (இதெல்லாம் நடந்தது) மறுமையை நம்புகின்றவர் யார், அதைப்பற்றி சந்தேகப்படுகின்றவர் யார் என்பதை நாம் கண்டறிந்து கொள்வதற்காகத்தான்! உம் இறைவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

22

قُلِ ادْعُوا الَّذِیْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ۚ لَا یَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ وَمَا لَهُمْ فِیْهِمَا مِنْ شِرْكٍ وَّمَا لَهٗ مِنْهُمْ مِّنْ ظَهِیْرٍ ۟

(நபியே, இந்த இணைவைப்பாளர்களிடம்) கூறும்: “அல்லாஹ்வை விடுத்து உங்களின் கடவுளர்களாக நீங்கள் யாரைக் கருதுகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் வானங்களிலோ பூமியிலோ உள்ள அணுவளவு பொருளுக்கும் உரிமையுடையவர்களல்லர். வானம் மற்றும் பூமியின் உடைமையில் அவர்கள் பங்காளியாகவும் இல்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாயும் இல்லை.

23

وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ حَتّٰۤی اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ قَالَ رَبُّكُمْ ؕ قَالُوا الْحَقَّ ۚ وَهُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟

மேலும், அல்லாஹ்விடத்தில் எந்த ஒரு பரிந்துரையும் யாருக்காகவும் பயனளிக்க முடியாது யாருக்கு அல்லாஹ் பரிந்துரை வழங்க அனுமதி தந்திருக்கின்றானோ அவரைத்தவிர! இவ்வாறு மக்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் அகலும்போது (பரிந்துரைப்பவர்களிடம்) “உங்களுடைய இறைவன் என்ன பதிலுரைத்தான்?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, “சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் மாபெரியவனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவார்கள்.

24

قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قُلِ اللّٰهُ ۙ وَاِنَّاۤ اَوْ اِیَّاكُمْ لَعَلٰی هُدًی اَوْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

(நபியே,) இவர்களிடம் கேளும்: “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” கூறும்: “அல்லாஹ்தானே!” இப்போது திட்டவட்டமாக நம் இருவரில் நாமோ அல்லது நீங்களோ யாராவது ஒருவர்தான் நேர்வழியில் இருக்கிறோம். அல்லது வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்திருக்கின்றோம்.”

25

قُلْ لَّا تُسْـَٔلُوْنَ عَمَّاۤ اَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُوْنَ ۟

(இவர்களிடம்) கூறும்: “நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி எங்களிடம் கேட்கப்பட மாட்டாது.”

26

قُلْ یَجْمَعُ بَیْنَنَا رَبُّنَا ثُمَّ یَفْتَحُ بَیْنَنَا بِالْحَقِّ ؕ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِیْمُ ۟

கூறும்: “நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான். பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான். அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்.”

27

قُلْ اَرُوْنِیَ الَّذِیْنَ اَلْحَقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ بَلْ هُوَ اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

(இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எவர்களை அவனோடு இணையானவர்களாய்ச் சேர்த்து வைத்திருக்கின்றீர்களோ அவர்களை எனக்குக் கொஞ்சம் காண்பியுங்களேன்!” ஒருபோதும் முடியாது! உண்மையில் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவாளனும் அந்த அல்லாஹ் ஒருவன்தான்!

28

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِیْرًا وَّنَذِیْرًا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

மேலும், (நபியே!) நாம் உங்களை மனிதகுலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கின்றோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.

29

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

மேலும், இவர்கள் உம்மிடம் “நீங்கள் உண்மையாளராயின் அந்த (மறுமையைப் பற்றிய) வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்” என்று கேட்கின்றார்கள்.

30

قُلْ لَّكُمْ مِّیْعَادُ یَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ ۟۠

நீர் கூறும்: “உங்களுக்காக எத்தகைய ஒரு நாள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது எனில், அதன் வருகையை ஒரு நிமிடம் பிற்படுத்தவும் உங்களால் முடியாது; ஒரு நிமிடம் முற்படுத்தவும் முடியாது.”

31

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِیْ بَیْنَ یَدَیْهِ ؕ وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۖۚ یَرْجِعُ بَعْضُهُمْ اِلٰی بَعْضِ لْقَوْلَ ۚ یَقُوْلُ الَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْا لَوْلَاۤ اَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِیْنَ ۟

இந்நிராகரிப்பாளர்கள் (உம்மிடம்) கூறுகின்றார்கள்: “நாங்கள் ஒருபோதும் இந்தக் குர்ஆனையும் நம்ப மாட்டோம்; இதற்கு முன்பு வந்திருந்த எந்த வேதத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” அந்தோ! கொடுமை புரியும் இவர்கள் தம்முடைய இறைவனின் திருமுன் நிறுத்தப்படும்போது இவர்களின் நிலையை நீர் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை) இவர்கள் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருப்பார்கள். (உலகில்) தங்களைப் பெரியவர்களாய்க் கருதிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “நீங்கள் இல்லாதிருந்தால் நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்திருப்போம்.”

32

قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْۤا اَنَحْنُ صَدَدْنٰكُمْ عَنِ الْهُدٰی بَعْدَ اِذْ جَآءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِیْنَ ۟

தங்களைப் பெரியவர்களாய்க் காட்டிக்கொண்டிருந்தவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி பதில் சொல்வார்கள்: “உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர் நாங்களா அதனை விட்டு உங்களைத் தடுத்தோம்? இல்லை! மாறாக, நீங்களே குற்றவாளிகளாயிருந்தீர்கள்.”

33

وَقَالَ الَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّیْلِ وَالنَّهَارِ اِذْ تَاْمُرُوْنَنَاۤ اَنْ نَّكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗۤ اَنْدَادًا ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ؕ وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِیْۤ اَعْنَاقِ الَّذِیْنَ كَفَرُوْا ؕ هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியவர்களாய்க் காட்டிக் கொண்டிருந்தவர்களிடம் கூறுவார்கள்: “இல்லை; இரவு பகலாக நீங்கள் செய்துகொண்டிருந்த வஞ்சனையாகும் இது! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிக்கும்படியும் மற்றவர்களை அவனுக்கு இணையாக்கும்படியும் நீங்கள் எங்களிடம் கூறியவண்ணம் இருந்தீர்கள்.” இறுதியில் இவர்கள் வேதனையைக் காணும்போது உள்ளூர வருந்துவார்கள். மேலும், நாம் இந்நிராகரிப்பாளர்களின் பிடரிகளில் விலங்குகளைப் பூட்டுவோம். தாம் எவ்விதம் செயல்பட்டார்களோ அதற்கேற்பவே கூலி கிடைக்கும் என்பதைத் தவிர வேறு பிரதிபலன் ஏதேனும் மக்களுக்குக் கிடைக்குமா என்ன?

34

وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ ۙ اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟

எச்சரிக்கை செய்யக்கூடிய ஒருவரை எந்த ஊருக்கு நாம் அனுப்பி வைத்தாலும் அவ்வூரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், “நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற தூதுச் செய்தியை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றே கூறினார்கள்.

35

وَقَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًا ۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟

மேலும், அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் (உங்களைவிட) அதிகமான செல்வமும் சந்ததிகளும் உடையவர்கள். நாங்கள் ஒருபோதும் தண்டனை பெறக்கூடியவர்கள் அல்லர்.”

36

قُلْ اِنَّ رَبِّیْ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠

(நபியே, இவர்களிடம் நீர்) கூறும்: “என் இறைவன் தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அளவோடு கொடுக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் (இந்த உண்மையை) அறிவதில்லை.”

37

وَمَاۤ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِیْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰۤی اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ؗ فَاُولٰٓىِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِی الْغُرُفٰتِ اٰمِنُوْنَ ۟

உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர! அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடிருப்பார்கள்.

38

وَالَّذِیْنَ یَسْعَوْنَ فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ فِی الْعَذَابِ مُحْضَرُوْنَ ۟

ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காகக் கடும் முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் வேதனையில் ஆழ்த்தப்படுவார்கள்.

39

قُلْ اِنَّ رَبِّیْ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَیْءٍ فَهُوَ یُخْلِفُهٗ ۚ وَهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟

(நபியே, இவர்களிடம்) கூறும்: என்னுடைய இறைவன் தன் அடிமைகளில் தான் நாடுவோருக்கு தாராளமாய் வாழ்வாதாரம் வழங்குகின்றான். இன்னும் தான் நாடுவோருக்கு அளவோடு கொடுக்கின்றான். நீங்கள் செலவு செய்கின்றவற்றுக்குப் பகரமாக இன்னும் பலவற்றை அவனே உங்களுக்குத் தருகின்றான். வாழ்வாதாரம் வழங்குவோரில் அவன் மிகச் சிறந்தவனாவான்.

40

وَیَوْمَ یَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ یَقُوْلُ لِلْمَلٰٓىِٕكَةِ اَهٰۤؤُلَآءِ اِیَّاكُمْ كَانُوْا یَعْبُدُوْنَ ۟

மேலும், அந்நாளில் அவன் மனிதர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவான். பிறகு வானவர்களிடம் கேட்பான்: “என்ன, இவர்கள் உங்களைத்தானா வணங்கிக் கொண்டிருந்தார்கள்?”

41

قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِیُّنَا مِنْ دُوْنِهِمْ ۚ بَلْ كَانُوْا یَعْبُدُوْنَ الْجِنَّ ۚ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ ۟

அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்: “தூய்மையானவன் நீ! எங்களுடைய தொடர்பு உன்னுடன்தானே தவிர இவர்களுடன் அல்ல! இவர்கள் வணங்கிக் கொண்டிருந்தது எங்களை அல்ல; ஜின்களைத்தான்! இவர்களில் பெரும்பாலோர் அந்த ஜின்களின் மீதே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.”

42

فَالْیَوْمَ لَا یَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ؕ وَنَقُوْلُ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟

(அவ்வேளை நாம் கூறுவோம்:) “இன்று உங்களில் எவரும் வேறெவர்க்கும் இலாபம் அளிக்கவும் முடியாது; நஷ்டம் ஏற்படுத்தவும் முடியாது.” மேலும், கொடுமை புரிந்து கொண்டு இருந்தவர்களிடம் நாம் கூறுவோம்: “இப்பொழுது சுவையுங்கள் இந்த நரகவேதனையை! இதைத்தான் நீங்கள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்கள்!”

43

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا رَجُلٌ یُّرِیْدُ اَنْ یَّصُدَّكُمْ عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُكُمْ ۚ وَقَالُوْا مَا هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ مُّفْتَرًی ؕ وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟

இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்படும்போது இவர்கள் கூறுகின்றார்கள். “இந்த மனிதர் விரும்புவதெல்லாம் உங்களுடைய முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை விட்டு உங்களைத் தடுத்துவிடுவதுதான்.” மேலும், கூறுகின்றார்கள்: “(குர்ஆன்) புனைந்துரைக்கப்பட்ட வெறும் பொய்யே தவிர வேறில்லை.” இந்நிராகரிப்பாளர்களின் முன்னால் சத்தியம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இதுவோ வெளிப்படையான சூனியம்!”

44

وَمَاۤ اٰتَیْنٰهُمْ مِّنْ كُتُبٍ یَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَیْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِیْرٍ ۟ؕ

நாம் இந்த மக்களுக்கு இவர்கள் படிக்கக்கூடிய வகையில் எந்த வேதத்தையும் முன்னர் வழங்கவில்லை. மேலும், உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரையும் இவர்களிடம் நாம் அனுப்பவுமில்லை

45

وَكَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۙ وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَیْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِیْ ۫ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠

இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்களும் பொய்யென்று தூற்றிவிட்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றில் பத்திலொரு பங்குகூட இவர்கள் பெறவில்லை. ஆனால், அவர்கள் என்னுடைய தூதர்களைப் பொய்யர்கள் எனத் தூற்றியபோது பாருங்கள்! என்னுடைய வேதனை எத்துணைக் கடுமையாக இருந்தது!

46

قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰی وَفُرَادٰی ثُمَّ تَتَفَكَّرُوْا ۫ مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ لَّكُمْ بَیْنَ یَدَیْ عَذَابٍ شَدِیْدٍ ۟

(நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன்: நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித் தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்; உங்களுடைய தோழரிடம் பைத்தியக்காரத்தனம் என்ன இருக்கிறது என்று! அவரோ ஒரு கடினமான வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார்.”

47

قُلْ مَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَكُمْ ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟

இவர்களிடம் கூறும்: “நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவன் அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.”

48

قُلْ اِنَّ رَبِّیْ یَقْذِفُ بِالْحَقِّ ۚ عَلَّامُ الْغُیُوْبِ ۟

இவர்களிடம் கூறும்: “என்னுடைய இறைவன் (என்னுள்) சத்தியத்தை உதிக்கச் செய்கின்றான். அவன் மறைவான உண்மைகளை நன்கறிபவனாக இருக்கின்றான்.”

49

قُلْ جَآءَ الْحَقُّ وَمَا یُبْدِئُ الْبَاطِلُ وَمَا یُعِیْدُ ۟

கூறுவீராக: “சத்தியம் வந்துவிட்டது. இனி, அசத்தியத்தினால் எதுவும் செய்ய முடியாது!”

50

قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَاۤ اَضِلُّ عَلٰی نَفْسِیْ ۚ وَاِنِ اهْتَدَیْتُ فَبِمَا یُوْحِیْۤ اِلَیَّ رَبِّیْ ؕ اِنَّهٗ سَمِیْعٌ قَرِیْبٌ ۟

கூறுவீராக: “நான் வழிதவறிப் போய்விட்டால், எனது வழிகேட்டின் தீயவிளைவு என்னையே சாரும். நான் நேர்வழியில் இருக்கிறேனென்றால், அது என்னுடைய இறைவன் எனக்கு அனுப்புகின்ற வஹியின்* காரணத்தினாலாகும். அவன் எல்லாவற்றையும் செவியுறுபவனும் அருகிலேயே உள்ளவனுமாவான்.”

51

وَلَوْ تَرٰۤی اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ

(மேலும்) அந்தோ! இவர்கள் திகைப்புற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களை நீர் காண வேண்டுமே! இவர்களால் எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. மாறாக, அருகிலிருந்தே பிடிக்கப்படுவார்கள்.

52

وَّقَالُوْۤا اٰمَنَّا بِهٖ ۚ وَاَنّٰی لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟ۚۖ

அப்போது, இவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம்.” ஆயினும், அவர்களை விட்டு தூரமாகச் சென்றுவிட்ட ஒன்றை எங்ஙனம் அவர்களால் கைக்கொள்ள முடியும்?

53

وَّقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُ ۚ وَیَقْذِفُوْنَ بِالْغَیْبِ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟

இதற்கு முன்போ அவர்கள் அதனை நிராகரித்துவிட்டிருந்தார்கள். மேலும், உண்மையான அறிவில்லாமல், புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தூரமான விஷயங்கள் குறித்து கற்பனைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள்.

54

وَحِیْلَ بَیْنَهُمْ وَبَیْنَ مَا یَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْیَاعِهِمْ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا فِیْ شَكٍّ مُّرِیْبٍ ۟۠

அந்நேரத்தில் எவற்றிற்காக இவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்களோ அவற்றைவிட்டு இவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள் இவர்களுக்கு முன்னர் இவர்களைப் போல் வாழ்ந்தவர்கள் தடுக்கப்பட்டதைப் போல! திண்ணமாக, இவர்கள் வழிகெடுக்கும் பெரும் ஐயப்பாட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.

PreviousAl-AhzabNextFatir

0:00–:––