All Surahs

Surah 43

الزخرف

Az-Zukhruf

43. ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)

89 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

حٰمٓ ۟ۚۛ

ஹாமீம்.

2

وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ

இந்தத் தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக!

3

اِنَّا جَعَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟ۚ

நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக!

4

وَاِنَّهٗ فِیْۤ اُمِّ الْكِتٰبِ لَدَیْنَا لَعَلِیٌّ حَكِیْمٌ ۟ؕ

மேலும், உண்மையில் இது ‘உம்முல் கிதாபில்’* பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் உயர் அந்தஸ்துடையதும் ஞானம் நிறைந்ததுமான வேதமாகும் அது!

5

اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِیْنَ ۟

நீங்கள் வரம்புமீறிச் சென்றுவிட்டிருக்கின்றீர்கள் என்பதற்காக நாம் உங்கள் மீது வெறுப்படைந்து இந்த அறிவுரையை உங்களிடம் அனுப்பாமல் நிறுத்திவிடுவோமா, என்ன?

6

وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِیٍّ فِی الْاَوَّلِیْنَ ۟

முன்பு வாழ்ந்து சென்ற சமூகங்களில் எத்தனையோ தூதர்களை நாம் அனுப்பியிருந்தோம்;

7

وَمَا یَاْتِیْهِمْ مِّنْ نَّبِیٍّ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

அவர்களிடம் வந்த எந்தத் தூதரையும் அவர்கள் பரிகாசம் செய்யாமல் இருந்ததில்லை!

8

فَاَهْلَكْنَاۤ اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰی مَثَلُ الْاَوَّلِیْنَ ۟

ஆக, எந்த மக்கள் இவர்களைவிட பன்மடங்கு வலிமை மிக்கவர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் அழித்துவிட்டோம். முன்பு வாழ்ந்த சமூகங்களின் முன்னுதாரணங்கள் சென்றுவிட்டிருக்கின்றன.

9

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙ

நீர் அவர்களிடம் “வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்தவன் யார்?” என்று கேட்பீராயின், “வல்லமையும் பேரறிவும் கொண்டவன்தான் அவற்றைப் படைத்தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்.

10

الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّجَعَلَ لَكُمْ فِیْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۚ

அவன்தான் உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டில் ஆக்கினான் அதிலே உங்களுக்காக பாதைகளை அமைத்தான்; நீங்கள் (நாடிய இடங்களுக்கான) வழியை அடைவதற்காக!

11

وَالَّذِیْ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ ۚ فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ۚ كَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟

மேலும், வானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நீரை இறக்கினான். அதன் மூலம் இறந்த பூமிக்கு உயிர் கொடுத்தெழுப்பினான். இவ்வாறே (ஒருநாள் பூமிக்குள்ளிருந்து) நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.

12

وَالَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَ ۟ۙ

அவனே அனைத்து ஜோடிகளையும் படைத்தான். மேலும், உங்களுக்காகக் கப்பல்களையும், கால்நடைகளையும் வாகனங்களாய் அமைத்தவனும் அவனே!

13

لِتَسْتَوٗا عَلٰی ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَیْتُمْ عَلَیْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ ۟ۙ

நீங்கள் அவற்றின் முதுகுகளின் மீது ஏறி அமர்வதற்காகவும், அவற்றின் மீது அமர்ந்த பிறகு உங்கள் இறைவனின் பேருதவியை நீங்கள் நினைவுகூர்ந்து இவ்வாறு பிரார்த்திப்பதற்காகவும்தான்: “தூய்மையானவன்; மேலும், இவற்றையெல்லாம் எங்களுக்கு வசப்படுத்தித் தந்தவன்! இவற்றை அவன் வசப்படுத்தித் தராவிட்டால் அவற்றை வசப்படுத்தும் ஆற்றல் எங்களிடம் இருக்கவில்லை.

14

وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ۟

மேலும், நாங்கள் எங்கள் இறைவனிடம் ஒருநாள் திரும்பிச் செல்லக்கூடியவர்களாவோம்.”

15

وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ؕ اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِیْنٌ ۟ؕ۠

இவர்கள் (இவை அனைத்தையும் அறிந்து ஏற்றுக் கொண்ட பிறகும்) அவனுடைய அடியார்களில் சிலரை அவனுடைய ஓர் அம்சமாக ஆக்கிவிட்டார்கள். உண்மையாதெனில், மனிதன் வெளிப்படையாக நன்றி கொன்றவனாயிருக்கின்றான்.

16

اَمِ اتَّخَذَ مِمَّا یَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِیْنَ ۟

என்ன, இறைவன் தன்னுடைய படைப்புகளிலிருந்து தனக்காகப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உங்களுக்கு ஆண்மக்களை வழங்கியிருக்கின்றானா?

17

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟

மேலும் (இவர்களுடைய நிலைமை என்னவெனில்) எந்தப் பிள்ளைகளைக் கருணைமிக்க அந்த இறைவனோடு இவர்கள் பாவித்துச் சொல்கின்றார்களோ அந்தப் பிள்ளைகள் இவர்களில் எவரேனும் ஒருவருக்குப் பிறந்திருப்பதாக நற்செய்தி சொல்லப்பட்டால், அவருடைய முகத்தில் இருள் சூழ்ந்து விடுகின்றது.

18

اَوَمَنْ یُّنَشَّؤُا فِی الْحِلْیَةِ وَهُوَ فِی الْخِصَامِ غَیْرُ مُبِیْنٍ ۟

மேலும், அவர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார். என்ன, ஆபரணங்களில் வளர்க்கப்படுகின்ற, விவாதத்தில் தன் கருத்தை முழுமையாகத் தெளிவுபடுத்த முடியாத பிள்ளைதான் அல்லாஹ்வின் பங்கில் வரவேண்டுமா?

19

وَجَعَلُوا الْمَلٰٓىِٕكَةَ الَّذِیْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ؕ اَشَهِدُوْا خَلْقَهُمْ ؕ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَیُسْـَٔلُوْنَ ۟

இவர்கள் கருணைமிக்க இறைவனின் சிறப்புக்குரிய அடியார்களான வானவர்களைப் பெண்களெனத் தீர்மானித்துக் கொண்டனர். அவர்களுடைய உடலமைப்பை இவர்கள் பார்த்ததுண்டா? இவர்களின் சாட்சியம் எழுதி வைக்கப்படும். அதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

20

وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ ؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۗ اِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟ؕ

மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “(நாங்கள் அவர்களை வணங்கக்கூடாது என) கருணைமிக்க இறைவன் நாடியிருந்தால், ஒருபோதும் நாங்கள் அவர்களை வணங்கியிருக்கமாட்டோம்.” இந்த விவகாரத்தின் யதார்த்த நிலையை இவர்கள் உறுதியாக அறிந்திருக்கவில்லை. இவர்கள் வெறும் ஊகங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள்!

21

اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ ۟

அல்லது இதற்கு முன்பு இவர்களுக்கு நாம் ஏதாவது வேதத்தை வழங்கியிருக்கின்றோமா? அந்த ஆதாரத்தை (தம்முடைய ‘வானவர் வழிபாட்டுக்கான’ அடிப்படையாக) இவர்கள் பெற்றிருக்கிறார்களா?

22

بَلْ قَالُوْۤا اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ ۟

இல்லவே இல்லை! மாறாக, இவர்கள் கூறுகின்றார்கள்: “எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்”

23

وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ ۙ اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ ۟

இவ்வாறு உமக்கு முன்பு எந்த ஊரில் எந்த எச்சரிப்பாளரை நாம் அனுப்பினாலும் அவ்வூரின் சுகபோகிகள் "எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்" என்று தான் கூறினார்கள்.

24

قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰی مِمَّا وَجَدْتُّمْ عَلَیْهِ اٰبَآءَكُمْ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟

ஒவ்வொரு தூதரும் அந்த மக்களிடம் இதைத்தான் கேட்டார்: “உங்கள் முன்னோர் எந்த வழியில் செல்வதைக் கண்டீர்களோ அதைவிடச் சரியான வழியை நான் காண்பித்தாலுமா நீங்கள் அந்த வழியில் சென்று கொண்டிருப்பீர்கள்?” அவர்கள் எல்லா இறைத்தூதர்களுக்கும் அளித்து வந்த பதில் இதுவே: “நீங்கள் எந்த தீனின் (மார்க்கத்தின்) பக்கம் அழைப்பதற்காக அனுப்பப்பட்டீர்களோ அந்த மார்க்கத்தை நாங்கள் நிராகரிக்கின்றோம்.”

25

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟۠

இறுதியில், அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். பொய்யென வாதிட்டவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக்கொள்ளும்!

26

وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِیْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ۟ۙ

இப்ராஹீம் தம்முடைய தந்தையிடமும், தம்முடைய சமூகத்தாரிடமும் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் எவற்றை வணங்குகின்றீர்களோ அவற்றுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

27

اِلَّا الَّذِیْ فَطَرَنِیْ فَاِنَّهٗ سَیَهْدِیْنِ ۟

"என் தொடர்போ என்னைப் படைத்த வனுடன் மட்டும்தான் இருக்கின்றது. அவனே எனக்கு வழி காட்டுவான்.”

28

وَجَعَلَهَا كَلِمَةً بَاقِیَةً فِیْ عَقِبِهٖ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

மேலும், இப்ராஹீம் தமக்குப் பின், தம் வழித்தோன்றல்களிடம் இதே வார்த்தைகளை விட்டுச் சென்றார்; அவர்கள் அவன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக! (அத்துடன் இவர்கள் மற்றவர்களை வழிபடத் தொடங்கிய போதும் நான் இவர்களை அழித்துவிடவில்லை.)

29

بَلْ مَتَّعْتُ هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی جَآءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِیْنٌ ۟

ஆயினும், இவர்களுக்கும் இவர்களின் முன்னோருக்கும் நான் வாழ்க்கை வசதிகளை வழங்கிக் கொண்டிருந்தேன் எதுவரையெனில் இவர்களிடம் சத்தியமும், தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு தூதரும் வரும் வரை!

30

وَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ ۟

ஆனால், அந்த சத்தியம் இவர்களிடம் வந்தபோது “இதுவோ சூனியம்; இதனை நாங்கள் ஏற்க மறுக்கின்றோம்” என்று இவர்கள் கூறிவிட்டனர்.

31

وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الْقَرْیَتَیْنِ عَظِیْمٍ ۟

மேலும், இவர்கள் கூறுகின்றனர்: “இந்தக் குர்ஆன் இவ்விரு ஊர்களிலுமுள்ள பெரிய மனிதர்களில் எவரேனும் ஒருவர் மீது ஏன் இறக்கியருளப்படவில்லை?”

32

اَهُمْ یَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ ؕ نَحْنُ قَسَمْنَا بَیْنَهُمْ مَّعِیْشَتَهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِیًّا ؕ وَرَحْمَتُ رَبِّكَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟

என்ன, இவர்கள் உம் இறைவனிடம் அருட்கொடையைப் பங்கிடுகின்றார்களா? உலக வாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களிடையே பகிர்ந்தளிக்கின்றோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்பதவியை அளித்தோம்; இவர்களில் சிலர் வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக! மேலும், உன் இறைவனின் அருட்கொடை (அதாவது தூதுத்துவம்) இவர்(களுடைய தலைவர்)கள் குவித்துக் கொண்டிருக்கும் செல்வத்தைவிட மதிப்பு வாய்ந்ததா கும்.

33

وَلَوْلَاۤ اَنْ یَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَعَلْنَا لِمَنْ یَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُیُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَیْهَا یَظْهَرُوْنَ ۟ۙ

மனிதர்கள் அனைவரும் (தீய) வழிமுறைகளை கடைப்பிடிக்கும் ஒரே சமுதாயத்தினராகி விடுவார்கள் எனும் நிலை இல்லாதிருந்தால் கருணைமிக்க இறைவனை நிராகரிப்பவர்களின் வீட்டு முகடுகளையும், அவர்கள் ஏறிச்செல்கின்ற படிக்கட்டுகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.

34

وَلِبُیُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَیْهَا یَتَّكِـُٔوْنَ ۟ۙ

அவர்களுடைய வீட்டுக் கதவுகளையும், அவர்கள் சாய்ந்திருக்கின்ற மஞ்சங்களையும் அனைத்தையும் வெள்ளியாகவும் நாம் ஆக்கியிருப்போம்.

35

وَزُخْرُفًا ؕ وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِیْنَ ۟۠

தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); இவை அனைத்தும் உலக வாழ்வுக்குரிய அற்ப சாதனங்களே அன்றி வேறில்லை. மறுமையோ உம் அதிபதியிடத்தில் இறையச்சமுடையவர்களுக்கே உரியதாகும்!

36

وَمَنْ یَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَیِّضْ لَهٗ شَیْطٰنًا فَهُوَ لَهٗ قَرِیْنٌ ۟

எந்த மனிதன், கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டு விட்டு அலட்சியமாக இருக்கின்றானோ அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவிவிடுகின்றோம். அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான்.

37

وَاِنَّهُمْ لَیَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِیْلِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟

அந்த ஷைத்தான்கள் இப்படிப்பட்டவர்களை நேர்வழியில் வரவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவர்களோ தாம் சரியான வழியில் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக் கொள்கின்றனர்.

38

حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیْتَ بَیْنِیْ وَبَیْنَكَ بُعْدَ الْمَشْرِقَیْنِ فَبِئْسَ الْقَرِیْنُ ۟

இறுதியில் இந்த மனிதன் நம்மிடம் வந்து சேரும்போது (தனது ஷைத்தானை நோக்கிச்) சொல்வான்: “அந்தோ! எனக்கும் உனக்குமிடையே கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையிலான இடைவெளி இருந்திருக்க வேண்டுமே! நீயோ மிக மோசமான நண்பனாய் இருந்திருக்கின்றாய்.”

39

وَلَنْ یَّنْفَعَكُمُ الْیَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟

அந்நேரம் அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் கொடுமைகளை புரிந்துவிட்ட பின் இன்று இந்தப் பேச்சு உங்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. நீங்களும் உங்களுடைய ஷைத்தான்களும் வேதனையில் பங்காளிகளாவீர்கள்!”

40

اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِی الْعُمْیَ وَمَنْ كَانَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

(நபியே!) நீர் செவிடர்களைக் கேட்கச் செய்வீரா? அல்லது குருடர்களுக்கும், வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களுக்கும் வழிகாட்டி விடுவீரா?

41

فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَ ۟ۙ

இப்போது நாம் இவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியுள்ளது; நாம் உம்மை உலகிலிருந்து எடுத்துக் கொண்டாலும் சரி

42

اَوْ نُرِیَنَّكَ الَّذِیْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَیْهِمْ مُّقْتَدِرُوْنَ ۟

அல்லது நாம் இவர்களுக்கு வாக்களித்திருக்கும் தீயகதியை உம் கண்களுக்குக் காண்பித்துக் கொடுத்தாலும் சரி; திண்ணமாக, நாம் இவர்களின் மீது முழுஆற்றல் உடையவர்களாக இருக்கிறோம்.

43

فَاسْتَمْسِكْ بِالَّذِیْۤ اُوْحِیَ اِلَیْكَ ۚ اِنَّكَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

ஆகவே, வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப் பட்டிருக்கும் வேதத்தை நீர் உறுதியாய்ப் பற்றிப் பிடிப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியில் இருக்கின்றீர்.

44

وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚ وَسَوْفَ تُسْـَٔلُوْنَ ۟

உண்மையில், இந்த வேதம் உமக்கும் உம் சமுதாயத்தினருக்கும் ஒரு மாபெரும் சிறப்பாகும். மேலும், விரைவில் நீங்கள் இதற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கும்.

45

وَسْـَٔلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً یُّعْبَدُوْنَ ۟۠

உமக்கு முன்னர் நாம், நம்முடைய எத்தனை தூதர்களை அனுப்பியிருந்தோமோ அவர்கள் அனைவரிடத்திலும் நீர் கேட்டுப் பாரும்; கருணைமிக்க ஏக இறைவனைத் தவிர வழிபடுவதற்கு வேறு கடவுளரை நாம் நியமித்திருந்தோமா, என்ன?

46

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَقَالَ اِنِّیْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

நாம் மூஸாவை நம்முடைய சான்றுகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரதானிகளிடமும் அனுப்பினோம். அவர் சென்று கூறினார்: “நான் உலக மக்கள் அனைவருடைய இறைவனின் தூதராய் இருக்கின்றேன்.”

47

فَلَمَّا جَآءَهُمْ بِاٰیٰتِنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَضْحَكُوْنَ ۟

பின்னர் அவர் நம்முடைய சான்றுகளை அவர்கள் முன் சமர்ப்பித்தபோது, அவற்றை அவர்கள் ஏளனம் செய்து சிரித்தார்கள்.

48

وَمَا نُرِیْهِمْ مِّنْ اٰیَةٍ اِلَّا هِیَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا ؗ وَاَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

ஒன்றன் பின் ஒன்றாக நாம் அவர்களுக்கு எப்படிப்பட்ட சான்றுகளைக் காண்பித்து வந்தோமெனில், அதில் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய சான்றைவிடக் கடினமானதாக இருந்தது! மேலும், அவர்களை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; அவர்கள் தங்களுடைய நடத்தையிலிருந்து விலகிவிட வேண்டும் என்பதற்காக!

49

وَقَالُوْا یٰۤاَیُّهَ السّٰحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ اِنَّنَا لَمُهْتَدُوْنَ ۟

(வேதனையில் ஆழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்) அவர்கள் கூறினார்கள்: “சூனியக்காரரே! உம் அதிபதியிடமிருந்து உமக்குக் கிடைத்திருக்கும் அந்தஸ்தின் அடிப்படையில் எங்களுக்காக அவனிடம் இறைஞ்சும். நாங்கள் திண்ணமாக நேரியவழிக்கு வந்துவிடுவோம்!”

50

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟

ஆனால், அவ்வாறே அவர்களைவிட்டுத் தண்டனையை நாம் விலக்கியபோது அவர்கள் வாக்கு மீறினார்கள்.

51

وَنَادٰی فِرْعَوْنُ فِیْ قَوْمِهٖ قَالَ یٰقَوْمِ اَلَیْسَ لِیْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِیْ مِنْ تَحْتِیْ ۚ اَفَلَا تُبْصِرُوْنَ ۟ؕ

(ஒருநாள்) ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரை நோக்கிக் கூறினான்: “என் மக்களே! எகிப்தின் அரசாட்சி என்னுடையதல்லவா? இந்த ஆறுகள் எனக்குக் கீழேயல்லவா ஓடிக் கொண்டிருக்கின்றன? என்ன, உங்களுக்குத் தெரியவில்லையா?

52

اَمْ اَنَا خَیْرٌ مِّنْ هٰذَا الَّذِیْ هُوَ مَهِیْنٌ ۙ۬ وَّلَا یَكَادُ یُبِیْنُ ۟

நான் சிறந்தவனா? அல்லது கேவலமானவனும் (தன்னுடைய கருத்தைத்) தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாதவனுமான இந்த மனிதன் சிறந்தவனா?

53

فَلَوْلَاۤ اُلْقِیَ عَلَیْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَآءَ مَعَهُ الْمَلٰٓىِٕكَةُ مُقْتَرِنِیْنَ ۟

ஏன், இவனுக்குத் தங்கக் காப்புகள் இறக்கித் தரப்படவில்லை? அல்லது வானவர்களின் ஒரு குழு இவனுடன் ஏன் வரவில்லை?”

54

فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟

அவன் (ஃபிர்அவ்ன்) தன்னுடைய சமூகத்தாரைச் சாதாரணமாகக் கருதினான். அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். உண்மையில் அவர்கள் பாவம் புரியும் மக்களாகவே இருந்தனர்.

55

فَلَمَّاۤ اٰسَفُوْنَا انْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ

இறுதியில், அவர்கள் நம்மைக் கோபமடையச் செய்தபோது நாம் அவர்களிடம் பழி வாங்கினோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

56

فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِیْنَ ۟۠

பிற்கால மக்களுக்கு முன்னோடிகளாகவும், படிப்பினையூட்டும் முன்னுதாரணங்களாகவும் அவர்களை ஆக்கி வைத்தோம்.

57

وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْیَمَ مَثَلًا اِذَا قَوْمُكَ مِنْهُ یَصِدُّوْنَ ۟

மேலும், மர்யத்தின் குமாரர் உதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்ட உடனேயே உம் சமூக மக்கள் ஆர்ப்பரித்தெழுந்தனர்.

58

وَقَالُوْۤا ءَاٰلِهَتُنَا خَیْرٌ اَمْ هُوَ ؕ مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ ۟

“எங்கள் கடவுள்கள் சிறந்தவையா அல்லது அவரா?” என்று கேட்டனர். அவர்கள் இந்த உதாரணத்தை முன்வைத்தது வெறும் வீண் வாதத்திற்குத்தான். உண்மையில் இவர்கள் குதர்க்கம் செய்யும் மக்களேயாவர்.

59

اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَیْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ

மர்யத்தின் குமாரரைப் பொறுத்த வரையில், அவர் ஓர் அடியாரேதான். அவர் மீது நாம் அருள்புரிந்திருந்தோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நமது ஆற்றலின் முன்னுதாரணமாக அவரை நாம் ஆக்கி இருந்தோம்.

60

وَلَوْ نَشَآءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَّلٰٓىِٕكَةً فِی الْاَرْضِ یَخْلُفُوْنَ ۟

நாம் நாடியிருந்தால் உங்களிலிருந்து வானவர்களைப் படைத்திருப்போம்; அவர்கள் உங்களின் பிரதிநிதிகளாய்ப் பூமியில் திகழ்ந்திருப்பார்கள்.

61

وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟

மேலும், அவர் (மர்யத்தின் குமாரர்) உண்மையில் மறுமையின் ஓர் அறிகுறியாகத் திகழ்கின்றார். எனவே, நீங்கள் அதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே நேரிய வழியாகும்.

62

وَلَا یَصُدَّنَّكُمُ الشَّیْطٰنُ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟

ஷைத்தான் உங்களை இதிலிருந்து தடுத்துவிட வேண்டாம். அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவனாய் இருக்கின்றான்.

63

وَلَمَّا جَآءَ عِیْسٰی بِالْبَیِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَیِّنَ لَكُمْ بَعْضَ الَّذِیْ تَخْتَلِفُوْنَ فِیْهِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟

மேலும், ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது கூறினார்: “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வந்திருக்கின்றேன்; மேலும், நீங்கள் என்னென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றீர்களோ அவற்றில் சிலவற்றின் உண்மை நிலையை உங்களிடம் விளக்கிக் காட்டுவதற்காகவும் வந்திருக்கின்றேன். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்குக் கீழ்ப்படியுங்கள்.

64

اِنَّ اللّٰهَ هُوَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟

உண்மையில், அல்லாஹ்தான் என்னுடைய அதிபதி; உங்களுடையவும் அதிபதி. ஆகவே, அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரிய வழியாகும்.”

65

فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ یَوْمٍ اَلِیْمٍ ۟

ஆனால், (அவர் இந்தத் தெளிவான அறிவுரையை வழங்கியும்) அந்தக் கூட்டத்தினர் தமக்குள் வேறுபட்டனர். எனவே, கொடுமை புரிந்தவர்களுக்கு அழிவுதான்; துன்புறுத்தக்கூடிய ஒருநாளின் தண்டனையின் வாயிலாக!

66

هَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

என்ன, இவர்கள் அறியாதிருக்கும் நிலையில் திடீரென மறுமைநாள் தங்களிடம் வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா?

67

اَلْاَخِلَّآءُ یَوْمَىِٕذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِیْنَ ۟ؕ۠

அந்த நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள்.

68

یٰعِبَادِ لَا خَوْفٌ عَلَیْكُمُ الْیَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟ۚ

அந்நாளில், கூறப்படும்: “என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை; உங்களுக்கு எவ்விதத் துயரமும் ஏற்படாது.

69

اَلَّذِیْنَ اٰمَنُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا مُسْلِمِیْنَ ۟ۚ

இவர்கள்தாம் நம் வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் கீழ்ப்படிந்தவர்களாகவும் விளங்கினர்

70

اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ ۟

நுழைந்துவிடுங்கள் சுவனத்தில்; நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்.”

71

یُطَافُ عَلَیْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚ وَفِیْهَا مَا تَشْتَهِیْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْیُنُ ۚ وَاَنْتُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟ۚ

தங்கத்தட்டுகளும், கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றி வந்து கொண்டிருக்கும். மனங்கள் விரும்பக்கூடிய கண்களுக்கு இன்பம் அளிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். (அவர்களிடம் கூறப்படும்:) “இங்கு நீங்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பீர்கள்.

72

وَتِلْكَ الْجَنَّةُ الَّتِیْۤ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களின் காரணத்தால், இந்தச் சுவனத்திற்கு வாரிசுகளாய் ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள்.

73

لَكُمْ فِیْهَا فَاكِهَةٌ كَثِیْرَةٌ مِّنْهَا تَاْكُلُوْنَ ۟

உங்களுக்காக இங்கு ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் உண்பீர்கள்.”

74

اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚۖ

குற்றவாளிகளோ நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.

75

لَا یُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِیْهِ مُبْلِسُوْنَ ۟ۚ

அவர்களின் வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அதில் நிராசையுற்றிருப்பார்கள்.

76

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِیْنَ ۟

நாம் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே கொடுமை இழைத்துக் கொண்டார்கள்.

77

وَنَادَوْا یٰمٰلِكُ لِیَقْضِ عَلَیْنَا رَبُّكَ ؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ ۟

அவர்கள் மன்றாடுவார்கள்: “மாலிகே!* உம் அதிபதி எங்கள் பிரச்னையை முடித்துவிட்டால் நன்றாய் இருந்திருக்குமே!” அவர் பதிலளிப்பார்: “நீங்கள் இப்படியே கிடப்பீர்கள்!

78

لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟

நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தோம். ஆனால், உங்களில் பெரும்பாலோருக்குச் சத்தியமே வெறுப்பாக இருந்தது.”

79

اَمْ اَبْرَمُوْۤا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَ ۟ۚ

என்ன, இவர்கள் ஏதேனும் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கின்றார்களா? அப்படியானால் நாமும் உரிய நடவடிக்கை எடுத்தே தீருவோம்.

80

اَمْ یَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ؕ بَلٰی وَرُسُلُنَا لَدَیْهِمْ یَكْتُبُوْنَ ۟

என்ன, இவர்களின் இரகசியங்களையும், கிசு கிசுப்புகளையும் நாம் கேட்பதில்லை என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்களா? நாம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். நம் வானவர்கள் அவர்களின் அருகில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

81

قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖۗ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِیْنَ ۟

அவர்களிடம் கூறும்: “உண்மையில் கருணைமிக்க இறைவனுக்கு ஏதேனும் பிள்ளைகள் இருந்திருக்குமானால் அனைவரையும்விட முதலில் வணங்குபவனாக நான் இருந்திருப்பேன்!”

82

سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟

தூய்மையானவன், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் அர்ஷின் • உரிமையாளனுமான இறைவன், இவர்கள் அவனோடு சேர்த்துச் சொல்கின்ற அனைத்தையும்விட்டு!

83

فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟

சரி, இவர்களை நீர் விட்டுவிடும், அவர்கள் தங்களின் வீண் கற்பனைகளில் மூழ்கியிருக்கட்டும், தங்களின் விளையாட்டில் இலயித்திருக்கட்டும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நாளை அவர்கள் சந்திக்கும் வரை!

84

وَهُوَ الَّذِیْ فِی السَّمَآءِ اِلٰهٌ وَّفِی الْاَرْضِ اِلٰهٌ ؕ وَهُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟

அவன் ஒருவனே வானத்திலும் இறைவன்; பூமியிலும் இறைவன்! மேலும் அவனே நுண்ணறிவாளன்; யாவும் அறிந்தவன்!

85

وَتَبٰرَكَ الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۚ وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

மேலும், வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்கும் இடையிலுள்ள அனைத்தினுடையவும் ஆட்சி எவனுடைய பிடியில் உள்ளதோ அவன் மிக உயர்ந்தவன். மேலும், மறுமை எப்போது வரும் எனும் ஞானம் அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.

86

وَلَا یَمْلِكُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

அவனை விட்டுவிட்டு இவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ, அவர்கள் பரிந்துரைக்கும் எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆனால், எவர்கள் ஞானத்தின் அடிப்படையில் சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்களோ அவர்களைத் தவிர!

87

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَیَقُوْلُنَّ اللّٰهُ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟ۙ

“இவர்களைப் படைத்தவன் யார்?” என்று நீர் இவர்களிடம் கேட்டால், “அல்லாஹ்” என்று இவர்களே கூறுவார்கள். பிறகு, எங்கிருந்து இவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

88

وَقِیْلِهٖ یٰرَبِّ اِنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ لَّا یُؤْمِنُوْنَ ۟ۘ

“என் அதிபதியே! இவர்கள் ஏற்றுக்கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர்” எனும் இறைத்தூதரின் இந்த வார்த்தையின் மீது சத்தியமாக!

89

فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ ؕ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟۠

சரி, (நபியே!) இவர்களுடைய செயல்களைப் பொறுத்துக்கொள்ளும். ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்’ என்று கூறும்! விரைவில் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.

PreviousAsh-ShuraNextAd-Dukhan

0:00–:––