All Surahs

Surah 49

الحجرات

Al-Hujurat

49. ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)

18 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَیْنَ یَدَیِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِیِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக் கொள்வதைப் போல், நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்கள் அனைத்தும் வீணாகிவிட வேண்டாம், நீங்கள் அதனை அறியாத நிலையில்!

3

اِنَّ الَّذِیْنَ یَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰی ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟

திண்ணமாக, எவர்கள் இறைத்தூதரின் திருமுன் (உரையாடும்போது) தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்துத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றன.

4

اِنَّ الَّذِیْنَ یُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟

(நபியே, உமது) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மைக் கூப்பிடுவோரில் பெரும்பாலோர் அறியாதவர்களே!

5

وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰی تَخْرُجَ اِلَیْهِمْ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

நீர் வெளியே வரும் வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால், அது அவர்களுக்கே நலம் தரத்தக்கதாய் இருந்திருக்கும். அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

6

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَیَّنُوْۤا اَنْ تُصِیْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰی مَا فَعَلْتُمْ نٰدِمِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.

7

وَاعْلَمُوْۤا اَنَّ فِیْكُمْ رَسُوْلَ اللّٰهِ ؕ لَوْ یُطِیْعُكُمْ فِیْ كَثِیْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَلٰكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَیْكُمُ الْاِیْمَانَ وَزَیَّنَهٗ فِیْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَیْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْیَانَ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الرّٰشِدُوْنَ ۟ۙ

நன்றாக அறிந்து கொள்ளுங்கள்; உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்; பல விவகாரங்களில் உங்கள் சொல்லை அவர் ஏற்றுக் கொள்வாராயின், நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள். ஆனால், அல்லாஹ் உங்களுக்கு (ஈமானில்) நம்பிக்கையில் பற்றுதலை ஏற்படுத்தினான். அதனை உங்கள் உள்ளத்திற்கு உகந்ததாய் ஆக்கினான். மேலும், நிராகரிப்பையும் பாவம்புரிவதையும் மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் ஆக்கினான். இத்தகையவர்களே நேரியவழியில் இருப்பவர்கள்;

8

فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

அல்லாஹ்வின் அருளாலும் தயவாலும். இன்னும் அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

9

وَاِنْ طَآىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِیْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَیْنَهُمَا ۚ فَاِنْ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَی الْاُخْرٰی فَقَاتِلُوا الَّتِیْ تَبْغِیْ حَتّٰی تَفِیْٓءَ اِلٰۤی اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَیْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟

மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான்.

10

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَیْنَ اَخَوَیْكُمْ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟۠

இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும்.

11

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ ۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ ؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ ۚ وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟

இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்.

12

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِیْرًا مِّنَ الظَّنِّ ؗ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا یَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ اَیُحِبُّ اَحَدُكُمْ اَنْ یَّاْكُلَ لَحْمَ اَخِیْهِ مَیْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیْمٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

13

یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُ وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآىِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

14

قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا یَدْخُلِ الْاِیْمَانُ فِیْ قُلُوْبِكُمْ ؕ وَاِنْ تُطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا یَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

இந்த நாட்டுப்புற அரபிகள் கூறுகின்றார்கள்: “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.” இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; வேண்டுமானால், ‘நாங்கள் கீழ்ப்படிந்தோம்’ என்று கூறுங்கள். நம்பிக்கை இன்னும் உங்கள் இதயங்களில் நுழையவில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அடிபணிந்தீர்களாயின், அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எந்தக் குறையும் வைக்கமாட்டான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான்.

15

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ یَرْتَابُوْا وَجٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟

உண்மையில், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அவர்கள் எவ்வித ஐயமும் கொள்வதில்லை. மேலும், தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்கள். அத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்!

16

قُلْ اَتُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِیْنِكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

(நபியே! நம்பிக்கைகொண்டதாக வாதிடுகின்ற) இவர்களிடம் கூறும்: “என்ன, உங்களது மார்க்கம் குறித்து அல்லாஹ்வுக்கு நீங்கள் அறிவித்துக்கொடுக்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அறிகின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

17

یَمُنُّوْنَ عَلَیْكَ اَنْ اَسْلَمُوْا ؕ قُلْ لَّا تَمُنُّوْا عَلَیَّ اِسْلَامَكُمْ ۚ بَلِ اللّٰهُ یَمُنُّ عَلَیْكُمْ اَنْ هَدٰىكُمْ لِلْاِیْمَانِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டுகிறார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டாதீர்கள்! மாறாக, நம்பிக்கை கொள்வதற்கான வழிகாட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ்தான் உங்களுக்குப் பேருதவி செய்திருக்கின்றான். (நம்பிக்கை கொண்டதாக வாதிடுவதில்) நீங்கள் வாய்மையாளர்களாய் இருந்தால்!

18

اِنَّ اللّٰهَ یَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவான ஒவ்வொன்றையும் அறிகின்றான். நீங்கள் செய்பவை அனைத்தும் அவனது பார்வையில் இருக்கின்றன.

PreviousAl-FathNextQaf

0:00–:––