All Surahs

Surah 58

المجادلة

Al-Mujadila

58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)

22 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِیْ تُجَادِلُكَ فِیْ زَوْجِهَا وَتَشْتَكِیْۤ اِلَی اللّٰهِ ۖۗ وَاللّٰهُ یَسْمَعُ تَحَاوُرَكُمَا ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟

தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும், அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். உங்கள் இருவரின் உரையாடலை அல்லாஹ் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான்.

2

اَلَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآىِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ ؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـِٔیْ وَلَدْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَیَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا ؕ وَاِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟

உங்களில் எவர்கள் தம்முடைய மனைவியரை ‘ளிஹார்’* செய்கின்றார்களோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகிவிடமாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவர்களே அவர்களின் அன்னையர் ஆவர். அவர்கள் கடும் வெறுப்புக்குரிய, பொய்யான சொல்லைக் கூறுகின்றார்கள். மேலும், உண்மை யாதெனில், அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

3

وَالَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ؕ ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

எவர்கள் தங்களுடைய மனைவியரை ‘ளிஹார்’ செய்து பின்னர், தாங்கள் கூறிய சொல்லைவிட்டுத் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தீண்டும் முன்பாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு உங்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. மேலும், நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான்.

4

فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ مِنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ۚ فَمَنْ لَّمْ یَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّیْنَ مِسْكِیْنًا ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟

இனி, எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லையானால், அவ்விருவரும் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கும் சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகின்றது என்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்! இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும், நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது.

5

اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ بَیِّنٰتٍ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟ۚ

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்; அவர்களுக்கு முன்பிருந்தவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்பட்டதைப் போன்று! நாம் தெள்ளத் தெளிவான சான்றுகளை இறக்கிவிட்டோம். இனி, நிராகரிப்பவர்களுக்கு இழிவுமிக்க வேதனை இருக்கின்றது.

6

یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ اَحْصٰىهُ اللّٰهُ وَنَسُوْهُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟۠

அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி, அவர்கள் என்னவெல்லாம் செய்துவிட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நாளில் (இந்த இழிவுமிக்க வேதனை கிட்டும்.) அவர்கள் மறந்து போய்விட்டனர். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் எண்ணி எண்ணி பாதுகாத்து வைத்திருக்கின்றான். மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாகவும் இருக்கின்றான்.

7

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ مَا یَكُوْنُ مِنْ نَّجْوٰی ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰی مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَیْنَ مَا كَانُوْا ۚ ثُمَّ یُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா, என்ன? மூன்று மனிதர்களிடையே இரகசியப் பேச்சுவார்த்தை எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே நான்காவதாக அல்லாஹ் இருந்தே தவிர! அல்லது ஐந்து மனிதர்களிடையே இரகசியப் பேச்சு எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே ஆறாவதாக அல்லாஹ் இருந்தே தவிர! இரகசிய பேச்சுக்களைப் பேசுவோர் இதனைவிடக் குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். பின்னர், அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கின்றார்கள் என்பதை அவன் மறுமைநாளில் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான்.

8

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نُهُوْا عَنِ النَّجْوٰی ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَیَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ ؗ وَاِذَا جَآءُوْكَ حَیَّوْكَ بِمَا لَمْ یُحَیِّكَ بِهِ اللّٰهُ ۙ وَیَقُوْلُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ لَوْلَا یُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُ ؕ حَسْبُهُمْ جَهَنَّمُ ۚ یَصْلَوْنَهَا ۚ فَبِئْسَ الْمَصِیْرُ ۟

எவர்கள் இரகசியப் பேச்சுகள் பேசுவதைவிட்டுத் தடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் தடுக்கப்பட்டிருந்த செயல்களையே மீண்டும் செய்கின்றார்கள். மேலும், இவர்கள் தங்களிடையே ஒளிந்து ஒளிந்து பாவமான வரம்பு மீறுகின்ற, தூதருக்கு மாறு செய்கின்ற பேச்சுகளையே பேசுகின்றார்கள். மேலும், இவர்கள் உம்மிடம் வரும்போது எந்த முறையில் அல்லாஹ் உமக்கு வாழ்த்து (ஸலாம்) கூறவில்லையோ அந்த முறையில் இவர்கள் உமக்கு ஸலாம் சொல்கின்றார்கள். மேலும், தங்களுடைய உள்ளங்களில் கூறிக்கொள்கின்றார்கள்: “நம்முடைய இந்தப் பேச்சுகளுக்காக அல்லாஹ் நமக்கு ஏன் தண்டனை தருவதில்லை?” அவர்களுக்கு நரகமே போதுமானது! அதற்கே அவர்கள் எரிபொருளாகுவார்கள். அவர்களின் கதி எத்துணைத் தீயது!

9

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَیْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰی ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் உங்களுக்குள் இரகசியம் பேசுவீர்களாயின் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், தூதருக்கு மாறு செய்வதற்காகவும் இரகசியம் பேசாதீர்கள்; மாறாக, நன்மையானதும் இறையச்சமுடையதுமான பேச்சுகளையே பேசுங்கள்! மேலும், எந்த இறைவன் முன்னிலையில் நீங்கள் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு அஞ்சியவாறு இருங்கள்.

10

اِنَّمَا النَّجْوٰی مِنَ الشَّیْطٰنِ لِیَحْزُنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیْسَ بِضَآرِّهِمْ شَیْـًٔا اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟

கிசுகிசுப்பது ஷைத்தானியச் செயலாகும். இறைநம்பிக்கை கொண்டோரை மனம் நோகச் செய்வதற்காகத்தான் அது செய்யப்படுகின்றது. ஆயினும், இறைவனின் அனுமதியின்றி அதனால் அவர்களுக்குச் சிறிதும் நஷ்டம் ஏற்படுத்த முடியாது. மேலும், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும்.

11

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قِیْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِی الْمَجٰلِسِ فَافْسَحُوْا یَفْسَحِ اللّٰهُ لَكُمْ ۚ وَاِذَا قِیْلَ انْشُزُوْا فَانْشُزُوْا یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

இறைநம்பிக்கைகொண்டவர்களே! அவைகளில் நகர்ந்து இடம் ஏற்படுத்திக் கொடுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால், இடம் ஏற்படுத்திக் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருவான். மேலும், “எழுந்து செல்லுங்கள்!” என உங்களிடம் சொல்லப்பட்டால், எழுந்து செல்லுங்கள். உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ, மேலும், எவர்கள் ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான். மேலும், நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கின்றான்.

12

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَیْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقَةً ؕ ذٰلِكَ خَیْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் தனிமையில் பேசுவதாயின் அவ்வாறு பேசுவதற்கு முன் சிறிது தானதர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும் மிகத் தூய்மையானதுமாகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் உங்களிடம் இல்லையென்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.

13

ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقٰتٍ ؕ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَیْكُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠

தனிமையில் உரையாடுவதற்கு முன் தான தர்மங்கள் வழங்க வேண்டியிருக்குமே என்று நீங்கள் பயந்துவிட்டீர்களா? பரவாயில்லை. நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் அதற்காக அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் நீங்கள் தொழுகையை நிலைநாட்டிக் கொண்டும் ஜகாத்தைக் கொடுத்துக் கொண்டும் இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழுங்கள். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

14

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ ؕ مَا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْ ۙ وَیَحْلِفُوْنَ عَلَی الْكَذِبِ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ۚ

அல்லாஹ்வின் சினத்திற்குள்ளான ஒரு கூட்டத்தாருடன் தோழமை பாராட்டியவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களும் அல்லர்; அவர்களைச் சார்ந்தவர்களும் அல்லர். மேலும் அவர்கள் அறிந்துகொண்டே பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றார்கள்.

15

اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அல்லாஹ் அவர்களுக்குக் கடும்வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அவர்கள் செய்து கொண்டிருப்பவை மிகவும் தீயசெயல்களே!

16

اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟

அவர்கள் தங்களுடைய சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுக்கின்றார்கள். இதற்காக அவர்களுக்கு இழிவுதரும் வேதனை இருக்கின்றது.

17

لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ؕ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

அவர்களின் செல்வங்களும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவாது; அவர்களின் பிள்ளைகளும் உதவ மாட்டார்கள். அவர்கள் நரகத்தின் தோழர்கள்! அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.

18

یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیَحْلِفُوْنَ لَهٗ كَمَا یَحْلِفُوْنَ لَكُمْ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰی شَیْءٍ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ ۟

எந்நாளில் அல்லாஹ், அவர்கள் அனைவரையும் உயிர்கொடுத்து எழுப்புவானோ அந்நாளில் அவனது திருமுன் சத்தியம் செய்வார்கள் உங்கள் முன் சத்தியம் செய்வது போல்! அதனால் தங்களுக்குச் சிறிது பயன் கிடைக்குமென்றும் எண்ணிக் கொள்வார்கள். நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெரும் பொய்யர்கள்.

19

اِسْتَحْوَذَ عَلَیْهِمُ الشَّیْطٰنُ فَاَنْسٰىهُمْ ذِكْرَ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ حِزْبُ الشَّیْطٰنِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّیْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ ۟

ஷைத்தான் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்திவிட்டான்; இறைவனைப் பற்றிய நினைப்பை அவர்களின் உள்ளங்களிலிருந்து மறக்கடித்து விட்டான். அவர்கள் ஷைத்தானுடைய கட்சியினராவர். தெரிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய கட்சியினர்தாம் நஷ்டம் அடையக் கூடியவர்கள்.

20

اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اُولٰٓىِٕكَ فِی الْاَذَلِّیْنَ ۟

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் திண்ணமாக, மிகவும் கேவலமான படைப்பினங்களைச் சேர்ந்தவர்களாவர்.

21

كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِیْ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟

நானும் என்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்லுவோம் என்று அல்லாஹ் எழுதிவிட்டான். உண்மையில், அல்லாஹ் பேராற்றல் உடையோனும் வலிமைமிக்கோனுமாய் இருக்கின்றான்.

22

لَا تَجِدُ قَوْمًا یُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ یُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِیْرَتَهُمْ ؕ اُولٰٓىِٕكَ كَتَبَ فِیْ قُلُوْبِهِمُ الْاِیْمَانَ وَاَیَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ ؕ وَیُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ اُولٰٓىِٕكَ حِزْبُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠

அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர்! அத்தகையோர் அவர்களுடைய தந்தையராயினும் அல்லது அவர்களுடைய தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை நம்பிக்கையைப் பதித்து வைத்துவிட்டான். மேலும், தன் சார்பிலிருந்து ரூஹை* வழங்கி அவர்களுக்கு வலிமை சேர்த்தான். மேலும், கீழே ஆறுகள் ஓடும் சுவனங்களில் அவன் அவர்களைப் புகச் செய்வான். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்சியினராவர். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் கட்சியினர்தாம் வெற்றி அடையக்கூடியவர்கள்.

PreviousAl-HadidNextAl-Hashr

0:00–:––