All Surahs

Surah 10

يونس

Yunus

10. ஸூரத்து யூனுஸ் (நபி)

109 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟

அலிஃப், லாம், றா இவை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

2

اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَیْنَاۤ اِلٰی رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ؔؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِیْنٌ ۟

(அலட்சியத்தில் மூழ்கியிருக்கும்) மக்களை எச்சரிப்பீராக என்றும், ஈமான் நம்பிக்கை கொள்வோர்க்கு அவர்களின் இறைவனிடம் உண்மையான மதிப்பும் கண்ணியமும் உண்டு என்று நற்செய்தி அறிவிப்பீராக என்றும் அவர்களிலிருந்தே ஒரு மனிதருக்கு நாம் வஹி அனுப்பியது அவர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? இதனைக் கண்டு இறைநிராகரிப்பாளர்கள் “இவர் ஒரு வெளிப்படையான சூனியக்காரர்” என்று கூறினார்கள்.

3

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ یُدَبِّرُ الْاَمْرَ ؕ مَا مِنْ شَفِیْعٍ اِلَّا مِنْ بَعْدِ اِذْنِهٖ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟

உண்மை யாதெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உங்கள் அதிபதி; அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து (பேரண்டத்தின்) அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகின்றான். எந்தப் பரிந்துரையாளரும் அவனது அனுமதி பெறாமல் பரிந்துரைக்க முடியாது! இத்தகைய அல்லாஹ்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, அவனையே வணங்குங்கள்! நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?

4

اِلَیْهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ اِنَّهٗ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟

நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கின்றான். பின்னர், மறுமுறையும் அவனே அவற்றைப் படைப்பான்; ஏனெனில், இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக! மேலும், எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டார்களோ அவர்கள் (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கொதிக்கும் நீரைக் குடிப்பார்கள்; துன்புறுத்தும் தண்டனையை அனுபவிப்பார்கள்.

5

هُوَ الَّذِیْ جَعَلَ الشَّمْسَ ضِیَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّ ۚ یُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟

அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்.

6

اِنَّ فِی اخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَّقُوْنَ ۟

திண்ணமாக, இரவு பகல் மாறி மாறி வருவதிலும்; வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள நாடும் மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

7

اِنَّ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِیْنَ هُمْ عَنْ اٰیٰتِنَا غٰفِلُوْنَ ۟ۙ

உண்மை யாதெனில், எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ, மேலும், உலக வாழ்க்கையில் மனநிறைவு கொண்டு அதிலே முழு நிம்மதியும் அடைந்தார்களோ, மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகளைக் குறித்து அலட்சியமாக இருக்கின்றார்களோ

8

اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

அவர்களின் புகலிடம் (தங்களின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையினால்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகமாகும்.

9

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَهْدِیْهِمْ رَبُّهُمْ بِاِیْمَانِهِمْ ۚ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

ஆனால், உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் ஈமான் நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;

10

دَعْوٰىهُمْ فِیْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَتَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۚ وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠

“இறைவா! நீயே தூய்மையானவன்” என்பதே அங்கு அவர்களின் துதியாக இருக்கும். மேலும், “சாந்தி நிலவட்டும்!” என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும். மேலும், “அகிலத்தார்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்பதே அவர்களுடைய அனைத்து விஷயங்களின் முடிவுரையாக இருக்கும்.

11

وَلَوْ یُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَیْرِ لَقُضِیَ اِلَیْهِمْ اَجَلُهُمْ ؕ فَنَذَرُ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟

மனிதர்கள் (உலகின்) நன்மைகளைக் கோருவதில் எந்த அளவு அவசரப்படுகின்றார்களோ அந்த அளவு மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில் அல்லாஹ்வும் அவசரங் காட்டினால், அவர்களின் செயல்பாட்டிற்கான அவகாசம் என்றைக்கோ முடிக்கப்பட்டு விட்டிருக்கும். (ஆனால் இது நமது நியதி அல்ல.) எனவே, எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ அவர்களை அவர்களின் வரம்பு மீறிய செயல்களிலேயே உழன்று கொண்டிருக்கும்படி நாம் விட்டுவிடுகின்றோம்.

12

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآىِٕمًا ۚ فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ یَدْعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّهٗ ؕ كَذٰلِكَ زُیِّنَ لِلْمُسْرِفِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில், அவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். ஆனால், நாம் அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நீக்கிவிடும் போது, அவன் தனக்கு ஏற்பட்டிருந்த துன்பத்திற்காக எப்போதுமே நம்மிடம் பிரார்த்திக்காதவன் போல் சென்று விடுகின்றான்! வரம்பு மீறி நடப்பவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் இவ்வாறே அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

13

وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا ؕ كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟

(மக்களே) உங்களுக்கு முன்னர் வாழ்ந்த பல சமுதாயத்தார்களை அவர்கள் கொடுமைகள் புரிந்தபோது நாம் அழித்துவிட்டோம். அவர்களிடமோ அவர்களின் தூதர்கள் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தனர்; ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே இல்லை. இவ்வாறே குற்றம் புரியும் கூட்டத்தாருக்கு அவர்களின் குற்றத்திற்கான கூலியை நாம் அளிக்கின்றோம்.

14

ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟

பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக!

15

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பாதவர்கள், “இதைத் தவிர வேறொரு குர்ஆனைக் கொண்டு வாரும்; அல்லது இதில் கொஞ்சம் மாற்றம் செய்யும்!” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “என் விருப்பப்படி அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்வது என் பணியல்ல. எனக்கு அறிவிக்கப்படுகின்ற இறைச்செய்தியைத்தான் நான் பின்பற்றுகின்றேன். நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மாபெரும் பயங்கர நாளின் வேதனைக்கு அஞ்சுகின்றேன்.”

16

قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗ فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟

மேலும், நீர் கூறும்: “(நான் ஓதிக் காண்பிக்கக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் உங்களுக்கு இந்தக் குர்ஆனை ஒருபோதும் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும், அல்லாஹ்வும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். இதற்கு முன்னர் நீண்ட காலம் நான் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கின்றேன். நீங்கள் சிந்தித்துணர வேண்டாமா?

17

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الْمُجْرِمُوْنَ ۟

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யென்று கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள்!”

18

وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟

இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான்.

19

وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

மேலும், (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்; பின்னர் பல்வேறு கொள்கைகளையும், வழிமுறைகளையும் தோற்றுவித்தனர். உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டிராவிட்டால், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டிருக்கும்.

20

وَیَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ۚ فَقُلْ اِنَّمَا الْغَیْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا ۚ اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟۠

மேலும், “இந்த நபியின் மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்று இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். நபியே! நீர் கூறும்: “மறைவானவற்றுக்கு உரியவன் அல்லாஹ்வே ஆவான். நீங்கள் எதிர்பாருங்கள்; நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.”

21

وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِیْۤ اٰیَاتِنَا ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا ؕ اِنَّ رُسُلَنَا یَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ۟

மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் கொடை(யின் சுவை)யை சுவைக்கச் செய்தால், உடனே அவர்கள் நம் சான்றுகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். நீர் கூறுவீராக: “அல்லாஹ் சூழ்ச்சிகளை (முறியடிக்கச்) செய்வதில் மிக விரைவானவன். அவனுடைய வானவர்கள் நீங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.”

22

هُوَ الَّذِیْ یُسَیِّرُكُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ حَتّٰۤی اِذَا كُنْتُمْ فِی الْفُلْكِ ۚ وَجَرَیْنَ بِهِمْ بِرِیْحٍ طَیِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِیْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِیْطَ بِهِمْ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ لَىِٕنْ اَنْجَیْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟

தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (தீனை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள்.

23

فَلَمَّاۤ اَنْجٰىهُمْ اِذَا هُمْ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَا بَغْیُكُمْ عَلٰۤی اَنْفُسِكُمْ ۙ مَّتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ ثُمَّ اِلَیْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.

24

اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

(எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.

25

وَاللّٰهُ یَدْعُوْۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

(இந்த நிலையற்ற வாழ்வின் மோகத்தில் நீங்கள் மயங்கிக் கிடக்கின்றீர்கள்). அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.

26

لِلَّذِیْنَ اَحْسَنُوا الْحُسْنٰی وَزِیَادَةٌ ؕ وَلَا یَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

எவர்கள் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப் புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள்.

27

وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

மேலும், தீமைகளைச் சம்பாதித்தவர்கள், அத் தீமைக்கேற்பக் கூலி பெறுவார்கள். மேலும், அவர்களை இழிவு சூழ்ந்திருக்கும்; அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இரவின் இருட்திரைகளால் மூடப் பட்டிருப்பது போன்று அவர்களின் முகங்களில் இருள் படிந்திருக்கும். அவர்கள் நரகத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.

28

وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟

மேலும், ஒரு நாளில் அவர்கள் அனைவரையும் (நம்முடைய நீதிமன்றத்தில்) நாம் ஒன்று திரட்டுவோம். பின்னர் இறைவனுக்கு இணைவைத்தவர்களிடம், “நீங்களும், நீங்கள் ஏற்படுத்திய கடவுளர்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். பின்னர் அவர்களுக்கிடையிலிருந்த அறிமுகமற்ற நிலையை அகற்றிவிடுவோம். அப்போது அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்கள், “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை என்று கூறுவார்கள்;

29

فَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنَنَا وَبَیْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِیْنَ ۟

எங்களுக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வின் சாட்சி போதுமானது. (நீங்கள் எங்களை வணங்கியிருந்தாலும்) உங்கள் வணக்கத்தை நாங்கள் அறவே அறியாதிருந்தோம்’ என்றும் கூறுவார்கள்.

30

هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ وَرُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠

அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்த வினைக(ளுக்குரிய கூலிக)ளை அனுபவிப்பான். மேலும், தம்முடைய உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்விடம் அவர்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் கற்பனை செய்து வந்த பொய்(த் தெய்வங்)கள் அனைத்தும் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும்!

31

قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ یَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ یُّخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَمَنْ یُّدَبِّرُ الْاَمْرَ ؕ فَسَیَقُوْلُوْنَ اللّٰهُ ۚ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟

(நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும், உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? மேலும், அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?” அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்கள் (உண்மைக்கு மாறாக நடப்பதை) தவிர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேளும்.

32

فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۖۚ فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟

ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன்! இந்த உண்மையைக் கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன எஞ்சியிருக்கும்? நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?

33

كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

(நபியே! பாரும்:) இவ்வாறு இறைக்கட்டளைக்கு மாறு செய்யும் போக்கினை மேற்கொள்வோர் குறித்து “திண்ணமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்ற உம் இறைவனின் வாக்கு உண்மையாகிவிட்டது.

34

قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ قُلِ اللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟

“நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா?” என்று (நபியே!) நீர் கேளும் நீர் கூறும்: “அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்?”

35

قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ ؕ قُلِ اللّٰهُ یَهْدِیْ لِلْحَقِّ ؕ اَفَمَنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ اَحَقُّ اَنْ یُّتَّبَعَ اَمَّنْ لَّا یَهِدِّیْۤ اِلَّاۤ اَنْ یُّهْدٰی ۚ فَمَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟

(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “உங்களால் உருவாக்கப்பட்ட கடவுளர்களில் சத்தியத்தின் பக்கம் வழி காட்டக்கூடியவர் எவரேனும் உண்டா?” நீர் கூறும்: “அல்லாஹ்தான் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுகின்றான். ஆகவே, சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுந்தவனா? அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி தானாக நேர்வழியைப் பெறமுடியாதவன் பின்பற்றத் தகுந்தவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எப்படியெல்லாம் (தவறான) முடிவுகளை எடுக்கின்றீர்கள்!”

36

وَمَا یَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕ اِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟

உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது. இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.

37

وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ یُّفْتَرٰی مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟۫

இந்தக் குர்ஆன் அல்லாஹ்(வின் வஹியே தவிர அவன்) அல்லாதவர்களால் புனைந்துரைக்கப்பட்டதன்று; உண்மையில் இது தனக்கு முன்னால் வந்துள்ள வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாகவும், ‘அல் கிதாபின்’ விளக்கமாகவும் திகழ்கின்றது. இது அகிலங்களின் அதிபதியிடமிருந்து வந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

38

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக் குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக்கொண்டு வாருங்கள். மேலும், அல்லாஹ்வை விடுத்து (உதவிக்காக) யார் யாரை உங்களால் அழைக்க முடியுமோ அவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள்!”

39

بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ یُحِیْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا یَاْتِهِمْ تَاْوِیْلُهٗ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟

உண்மையில் எந்த வேதத்தை இவர்கள், தம் அறிவால் புரிந்து கொள்ளவில்லையோ அந்த வேதத்தையும், அது விடுக்கும் எச்சரிக்கையின் இறுதி விளைவு அவர்களிடம் வராத நிலையில் அதையும் (வெறும் கற்பனையின் அடிப்படையில்) பொய் என்று கூறுகின்றார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன் சென்றுபோன மக்களும் பொய்யென்று கூறி வந்தனர். எனவே, அந்த அக்கிரமக்காரர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாரும்!

40

وَمِنْهُمْ مَّنْ یُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا یُؤْمِنُ بِهٖ ؕ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِیْنَ ۟۠

அவர்களில் சிலர் இதன் மீது நம்பிக்கை கொள்வார்கள். வேறு சிலர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். இத்தகைய குழப்பவாதிகளை உம்முடைய இறைவன் நன்கறிபவனாக இருக்கின்றான்.

41

وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّیْ عَمَلِیْ وَلَكُمْ عَمَلُكُمْ ۚ اَنْتُمْ بَرِیْٓـُٔوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟

மேலும், இவர்கள் உம்மைப் பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: “என்னுடைய செயல் எனக்குரியது; உங்களுடைய செயல் உங்களுக்குரியது. நான் செய்கின்ற செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளர்களல்லர். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கு நானும் பொறுப்பாளன் அல்லன்!”

42

وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُوْنَ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا یَعْقِلُوْنَ ۟

மேலும், நீர் கூறுவதைக் கேட்பவர் (கள் போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் விளங்காமல் இருந்தாலும் அச்செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?

43

وَمِنْهُمْ مَّنْ یَّنْظُرُ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تَهْدِی الْعُمْیَ وَلَوْ كَانُوْا لَا یُبْصِرُوْنَ ۟

மேலும், உம்மைப் பார்ப்பவர்(போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் புலப்படாவிட்டாலும் அக்குருடர்களுக்கு உம்மால் வழிகாட்ட முடியுமா?

44

اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ النَّاسَ شَیْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள்.

45

وَیَوْمَ یَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ یَتَعَارَفُوْنَ بَیْنَهُمْ ؕ قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟

(இன்று இவர்கள் உலக வாழ்க்கையில் மதிமயங்கிக் கிடக்கின்றார்கள்.) ஆனால் அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், (இவ்வுலக வாழ்க்கை அவர்களுக்கு எவ்வாறு தோன்றுமெனில்) தமக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக பகலின் சொற்ப நேரமே தவிர (உலகில்) தாங்கள் தங்கியிருக்கவில்லை என்பது போல் தோன்றும்! அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யென்று கூறியவர்களும், ஒருபோதும் நேர் வழியின்படி வாழாதவர்களும் நிச்சயமாக பேரிழப்பிற்கு ஆளாகி விட்டார்கள் (என்பதும் அன்று உறுதியாகிவிடும்).

46

وَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا یَفْعَلُوْنَ ۟

அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கின்ற தீய விளைவின் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும் போதே) காண்பித்து விட்டாலும் அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மை எடுத்துக் கொண்டாலும் எவ்வாறாயினும் நம்மிடமே அவர்கள் திரும்பி வர வேண்டியுள்ளது. மேலும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அவற்றுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.

47

وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் இறைத்தூதர் இருக்கிறார். பிறகு (ஏதேனும் உம்மத்தாரிடம்) அவர்களின் தூதர் வந்துவிட்டால், அவர்களுடைய கதி நீதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. மேலும், அவர்கள் மீது (இம்மியளவும்) அநீதி இழைக்கப்படுவதில்லை.

48

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

மேலும், “உங்களுடைய இந்த எச்சரிக்கை உண்மையாக இருந்தால் அது எப்போது நிறைவேறும்?” என்று அவர்கள் வினவுகின்றார்கள்.

49

قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ؕ اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟

(நபியே!) நீர் கூறும்: “எனக்கு நானே பலனளித்துக் கொள்ளவும், நஷ்டம் விளைவித்துக் கொள்ளவும்கூட எனக்கு அதிகாரமில்லை. ஆனால், அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணை உண்டு. அவர்களுடைய இத்தவணை நிறைவடைந்து விட்டால் அவர்கள் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.”

50

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَیَاتًا اَوْ نَهَارًا مَّاذَا یَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ۟

(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் என்றாவது சிந்தித்திருக்கின்றீர்களா? அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ (திடீரென்று) உங்களிடம் வந்துவிட்டால் (அப்போது உங்களால் என்ன செய்ய இயலும்?) இக்குற்றவாளிகள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

51

اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟

அது உங்களை வந்து தாக்கும்போதுதான் அதனை நம்புவீர்களா? இப்போது தப்பிக்கப் பார்க்கின்றீர்களா? அது வரவேண்டுமென்று நீங்கள்தானே அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்.

52

ثُمَّ قِیْلَ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ ۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟

பிறகு அந்த அக்கிரமக்காரர்களிடம் கூறப்படும்: “இதோ! நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! எதனை நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களோ அதற்குரிய தண்டனையைத் தவிர வேறு என்ன கூலிதான் உங்களுக்கு அளிக்கப்படும்?”

53

وَیَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ؔؕ قُلْ اِیْ وَرَبِّیْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔؕۚ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟۠

மேலும், “நீர் கூறுவது உண்மைதானா?” என்று உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “என் இறைவன் மீது ஆணையாக! அது முற்றிலும் உண்மையானதே! மேலும், அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையை நீங்கள் பெற்றிருக்கவில்லை.”

54

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

அக்கிரமம் செய்த ஒவ்வொருவனும் தன்னிடம் இந்த பூமியில் உள்ள செல்வம் அனைத்தும் இருந்தாலும், அந்த வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனை (முழுவதும்) ஈடாக அளிப்பதற்குத் தயாராகி விடுவான். மேலும், இவர்கள் அவ்வேதனையைக் காணும்போது, உள்ளூரப் பெரிதும் வருந்துவார்கள். ஆயினும், அவர்களிடையே முற்றிலும் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கப்படும்; அவர்கள் (எவ்வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

55

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

தெரிந்து கொள்ளுங்கள்! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமலிருக்கின்றனர்.

56

هُوَ یُحْیٖ وَیُمِیْتُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

அவனே வாழ்வை அளிக்கின்றான். மேலும், மரணம் அளிப்பவனும் அவனே! மேலும் நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

57

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ ۙ۬ وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.

58

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ هُوَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟

(நபியே) நீர் கூறும்: “அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்.”

59

قُلْ اَرَءَیْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَی اللّٰهِ تَفْتَرُوْنَ ۟

(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஜ்கில் (அருட்பேற்றில்) சிலவற்றைத் தடுக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே!” (நபியே! இவர்களிடம்) கேளுங்கள்: “இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கின்றீர்களா?”

60

وَمَا ظَنُّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟۠

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு ஏற்படும் நிலையைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? திண்ணமாக, அல்லாஹ் மக்கள் மீது கருணையுடையவனாக இருக்கின்றான். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

61

وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟

(நபியே!) நீர் எந்த நிலைமையிலிருந்தாலும், குர்ஆனிலிருந்து எதை நீர் ஓதிக் காண்பித்தாலும், (மக்களே) நீங்களும் எந்தச் செயலைச் செய்து கொண்டிருந்தாலும், அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆக, வானம் மற்றும் பூமியில் உள்ள பொருள்களில் அணுவளவும் உம் இறைவனின் பார்வையை விட்டு மறைவானதல்ல! அதைவிடச் சிறியதோ, பெரியதோ அனைத்தும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை.

62

اَلَاۤ اِنَّ اَوْلِیَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚۖ

தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.

63

الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟ؕ

அவர்களோ நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கினை மேற் கொண்டிருந்தார்கள்.

64

لَهُمُ الْبُشْرٰی فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ؕ لَا تَبْدِیْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ؕ

இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்திகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வாக்குகள் மாறக்கூடியவையல்ல! இதுதான் மாபெரும் வெற்றியாகும்.

65

وَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ؕ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

(நபியே!) அவர்களுடைய (அவதூறான) பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம்! கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. அவன் அனைத்தையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

66

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ ؕ وَمَا یَتَّبِعُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟

அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்கள், பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்குரியவர்களாவர். எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு (தாம் உருவாக்கிக் கொண்ட) தெய்வங்களை அழைக்கின்றார்களோ அவர்கள் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றுகின்றார்கள். மேலும், வெறும் கற்பனைகளில்தான் மூழ்கியிருக்கின்றார்கள்.

67

هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟

அல்லாஹ்தான் உங்களுக்காக இரவை அமைத்தான்; அதில் நீங்கள் நிம்மதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், பகலை ஒளிமிக்கதாக அமைத்தான்! திண்ணமாக (திறந்த மனத்துடன் இறைத்தூதரின் அழைப்பைச்) செவிமடுக்கும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன.

68

قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ هُوَ الْغَنِیُّ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

‘அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான்’ என மக்கள் கூறிவிட்டார்கள். (ஸுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் புனிதமானவன்! அவன் தேவைகள் இல்லாதவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். இந்நிலையில் இக்கூற்றுக்கு உங்களிடம் என்னதான் ஆதாரம் இருக்கிறது? நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்களா?

69

قُلْ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ

(நபியே!) நீர் கூறும்: “எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றியடைவதில்லை.”

70

مَتَاعٌ فِی الدُّنْیَا ثُمَّ اِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِیْقُهُمُ الْعَذَابَ الشَّدِیْدَ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠

உலகில் (அவர்கள் அனுபவிப்பது) கொஞ்ச நாள் வாழ்க்கைதான்! பிறகு நம்மிடமே அவர்கள் திரும்ப வரவேண்டியுள்ளது. பின்னர் அவர்கள் மேற்கொண்டிருந்த நிராகரிப்புப் போக்கிற்குப் பகரமாக கடுமையான வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.

71

وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟

மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தன்னுடைய சமுதாயத்தினரை நோக்கி கூறினார்: “என் சமுதாயத்தினரே! நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப்போது) நான் எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உதவியைப் பெற்று உங்களுக்கிடையே ஒருமித்த தீர்மானத்திற்கு வாருங்கள்! பிறகு அந்தத் தீர்மானத்தின் எந்த அம்சமும் உங்கள் பார்வையிலிருந்து மறைந்துவிடாவண்ணம் அதனைப் பற்றி நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள்; பிறகு (அதனை) எனக்கெதிராகச் செயல்படுத்துங்கள்; மேலும், எனக்குச் சற்றும் அவகாசம் அளிக்காதீர்கள்!

72

فَاِنْ تَوَلَّیْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۙ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟

நீங்கள் (என் நல்லுரையைப்) புறக்கணித்தால் எனக்கு ஒன்றும் இழப்பு ஏற்பட்டு விடாது. நான் உங்களிடம் கூலி எதனையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே உள்ளது. (எவர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும்) நான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்பவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.”

73

فَكَذَّبُوْهُ فَنَجَّیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟

அவர்கள் அவரைப் ‘பொய்யர்’ என்று கூறினார்கள். இதன் விளைவாக நாம் அவரையும் அவருடன் கப்பலிலிருந்த மக்களையும் காப்பாற்றினோம்; மேலும் அவர்களை (இப்பூமியில்) பிரதிநிதிகளாக்கினோம். மேலும், நம் வசனங்களைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த அனைவரையும் மூழ்கடித்தோம். பாருங்கள்! எச்சரிக்கப்பட்டிருந்(தும் ஏற்றுக் கொள்ளா)தவர்களின் கதி என்னவாயிற்று?

74

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟

பின்னர், நாம் நூஹுக்குப் பிறகு தூதர்கள் பலரை அவரவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும், அத்தூதர்கள் அவர்களிடம் மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆயினும், எவற்றை முன்னர் பொய்யெனக் கூறிவந்தார்களோ அவற்றை அவர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்.

75

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟

பின்னர், அவர்களுக்குப் பிறகு மூஸா மற்றும் ஹாரூனை, ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமூகப் பிரமுகர்களிடமும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் தற்பெருமை கொண்டதோடு குற்றம் புரியும் கூட்டத்தினராய் இருந்தனர்.

76

فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِیْنٌ ۟

எனவே, நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது, “திண்ணமாக இது வெளிப்படையான சூனியம்” என்று கூறினார்கள்.

77

قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟

அதற்கு மூஸா கூறினார்: “சத்தியம் உங்களிடம் வந்த பிறகு அதைப் பற்றியா இவ்வாறு கூறுகின்றீர்கள்? இது என்ன சூனியமா? உண்மையில் சூனியக்காரர்கள் வெற்றி பெறுவதில்லை.”

78

قَالُوْۤا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِیَآءُ فِی الْاَرْضِ ؕ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِیْنَ ۟

அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்கள் எந்த வழியில் வாழ்ந்திடக் கண்டோமோ அந்த வழியிலிருந்து எங்களைத் திருப்பிவிட வேண்டும்; மேலும், இப்புவியில் உங்களுடைய மேலாதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? ஆகவே உங்களிருவரையும் நாங்கள் நம்பவே மாட்டோம்!”

79

وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِیْ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟

மேலும், ஃபிர்அவ்ன், “கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று தன்னைச் சேர்ந்தவர்களிடம் கூறினான்.

80

فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟

சூனியக்காரர்கள் வந்தபோது மூஸா, அவர்களை நோக்கி, “நீங்கள் எறிய இருப்பவற்றை எறியுங்கள்!” என்றார்.

81

فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰی مَا جِئْتُمْ بِهِ ۙ السِّحْرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِیْنَ ۟

அவர்கள் எறிந்தபோது, மூஸா கூறினார்: “நீங்கள் நிகழ்த்திக்காட்டியது சூனியமேயாகும். திண்ணமாக, அல்லாஹ் அதனை இப்பொழுதே தகர்த்து விடுவான். ஏனெனில், அல்லாஹ் குழப்பம் புரிவோரின் செயலைச் சீர்படுத்துவதில்லை.

82

وَیُحِقُّ اللّٰهُ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟۠

அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை சத்தியம்தான் என்று நிரூபித்து விடுகின்றான். குற்றவாளிகளுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”

83

فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟

(பாருங்கள்!) ஃபிர்அவ்னுக்கு அஞ்சியும், அவன் வேதனையில் ஆழ்த்திவிடுவானோ என்று பயந்த சமூகப் பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவருடைய சமூகத்தாரில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை சில இளைஞர்களைத் தவிர! உண்மை யாதெனில், ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெரும் வல்லமை கொண்டவனாக இருந்தான். திண்ணமாக, அவன் எந்த எல்லையை மீறுவதற்கும் தயங்காதவர்களில் ஒருவனாக இருந்தான்.

84

وَقَالَ مُوْسٰی یٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَیْهِ تَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّسْلِمِیْنَ ۟

மூஸா (தன் சமூகத்தாரை நோக்கிக்) கூறினார்: “என் சமூகத்தவரே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவனையே முற்றிலும் சார்ந்து வாழுங்கள் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால்!”

85

فَقَالُوْا عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ

அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள். “நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவனே! அக்கிரமம் புரியும் கூட்டத்தாருக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே!

86

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

மேலும், நிராகரிக்கும் கூட்டத்தாரிடமிருந்து உனது கருணையினால் எங்களைக் காப்பாற்றுவாயாக!”

87

وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰی وَاَخِیْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُیُوْتًا وَّاجْعَلُوْا بُیُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِیْمُوا الصَّلٰوةَ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟

மேலும், நாம் மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் வஹி அறிவித்தோம்: “உங்களுடைய சமுதாயத்தாருக்காக எகிப்தில் சில இல்லங்களை அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், உங்களுடைய அந்த இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு தொழுகையை நிலைநாட்டுங்கள்! மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவியுங்கள்!”

88

وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟

மூஸா இவ்வாறு இறைஞ்சினார்: “எங்கள் இறைவனே! நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய்; எங்கள் இறைவனே! உன் வழியில் செல்லவிடாமல் (மக்களை) அவர்கள் திசை திருப்புவதற்காகவா (அவற்றை நீ அளித்திருக்கின்றாய்)? எங்கள் இறைவனே! அவர்களின் செல்வங்களை அழித்து விடுவாயாக! மேலும், துன்புறுத்தும் வேதனையைக் கண்ணால் காணும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களை இறுகச்செய்வாயாக!”

89

قَالَ قَدْ اُجِیْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِیْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیْلَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟

அதற்கு அல்லாஹ் பதில் கூறினான்: “உங்கள் இருவருடைய இறைஞ்சுதலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள்! அறியாதவர்களின் வழிமுறையை ஒருபோதும் நீங்கள் பின்பற்றாதீர்கள்!”

90

وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ ۙ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟

மேலும், நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது அலறினான்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும் (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்!”

91

آٰلْـٰٔنَ وَقَدْ عَصَیْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟

(பதில் கூறப்பட்டது:) “இப்போதா நம்பிக்கை கொள்கிறாய்? இதற்குச் சற்று முன்வரை நீ மாறுசெய்து கொண்டிருந்தாய். குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாயும் இருந்தாய்.

92

فَالْیَوْمَ نُنَجِّیْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰیَةً ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰیٰتِنَا لَغٰفِلُوْنَ ۟۠

இன்று உன் உடலை மட்டும் நாம் காப்பாற்றுவோம்; உனக்குப் பின்னால் வரக்கூடிய மக்களுக்குப் படிப்பினை தரும் சான்றாக விளங்கும் பொருட்டு! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நம் சான்றுகளை அலட்சியப்படுத்துபவர்களாய் இருக்கின்றனர்.”

93

وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

நாம் இஸ்ராயீயிலின் வழித்தோன்றல்களை மிகச் சிறந்த இடத்தில் வசிக்கச் செய்தோம். மேலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதிகளையும் வழங்கினோம். உண்மையான அறிவு அவர்களிடம் வந்த பின்னரேயன்றி, அவர்கள் பிளவுபடவில்லை. அவர்கள் எதில் பிளவுபட்டிருந்தார்களோ அதைக் குறித்து மறுமைநாளில் அவர்களுக்கு இடையே திண்ணமாக உம்முடைய இறைவன் தீர்ப்பு வழங்குவான்.

94

فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ

நாம் உம்மீது இறக்கியருளியவற்றில் உமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உமக்கு முன்பிருந்தே வேதத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீர் கேளும். உண்மையில் உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்தியமே வந்துள்ளது. எனவே, சந்தேகம் கொள்வோருள் நீரும் ஒருவராகிவிடவேண்டாம்.

95

وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِیْنَ ۟

மேலும், எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களுள் ஒருவராகவும் நீர் ஆகிவிடவேண்டாம். அவ்வாறாயின் இழப்புக்கு ஆளானோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்!

96

اِنَّ الَّذِیْنَ حَقَّتْ عَلَیْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ

உண்மை யாதெனில், எவர்கள் மீது உம்முடைய இறைவனின் வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

97

وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰیَةٍ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟

எத்தனை சான்றுகள் அவர்களிடம் வந்தாலும் சரியே! அவர்கள் துன்புறுத்தும் வேதனையைக் கண்டால் அன்றி; (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்).

98

فَلَوْلَا كَانَتْ قَرْیَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِیْمَانُهَاۤ اِلَّا قَوْمَ یُوْنُسَ ؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟

(இறைத்தண்டனையைக் கண்டபோது) நம்பிக்கை கொண்ட எந்த ஊர் மக்களுக்காவது அவர்களுடைய நம்பிக்கை பயன் அளித்திருப்பதாக எந்த ஓர் எடுத்துக்காட்டாவது இருக்கிறதா யூனுஸுடைய சமுதாயத்தைத் தவிர? (அத்தகைய எடுத்துக்காட்டு எதுவும் இல்லை) அந்தச் சமுதாயத்தினர் நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை நாம் அவர்களை விட்டு அகற்றி விட்டோம். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவும் செய்தோம்.

99

وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِی الْاَرْضِ كُلُّهُمْ جَمِیْعًا ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰی یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟

(உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது) உம் இறைவனின் நாட்டமாக இருந்தால், இப்பூமியிலுள்ள அனைவருமே இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்களாகி விடவேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்துவீரா?

100

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَجْعَلُ الرِّجْسَ عَلَی الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟

எந்த மனிதனும் அல்லாஹ்வின் நாட்டமின்றி நம்பிக்கை கொள்ள முடியாது. மேலும், எவர்கள் சிந்தித்துணரவில்லையோ அவர்கள்மீது அவன் மாசுபடியச் செய்கின்றான். (இதுவே அவனது நியதியாகும்.)

101

قُلِ انْظُرُوْا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَا تُغْنِی الْاٰیٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟

(நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்.” நம்பிக்கை கொள்ள விரும்பாத கூட்டத்தாருக்கு, சான்றுகளும் எச்சரிக்கைகளும் என்ன பலனை அளித்துவிடப் போகின்றன?

102

فَهَلْ یَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَیَّامِ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ ؕ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟

தமக்கு முன்னால் சென்று போன மக்கள் அனுபவித்ததைப் போன்ற வேதனை நிறைந்த நாட்களைத் தவிர வேறு எதனை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? எனவே, இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! நானும் உங்களோடு எதிர்பார்ப்பவனாய் இருக்கின்றேன்.”

103

ثُمَّ نُنَجِّیْ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚ حَقًّا عَلَیْنَا نُنْجِ الْمُؤْمِنِیْنَ ۟۠

பிறகு (இவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது) நாம் நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றிவிடுகின்றோம். இதுவே நம்முடைய வழிமுறையாகும். நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவது நம் மீது கடமையாகும்.

104

قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ شَكٍّ مِّنْ دِیْنِیْ فَلَاۤ اَعْبُدُ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ ۖۚ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ

(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “மனிதர்களே, நீங்கள் (இப்பொழுதும்கூட) என்னுடைய தீனை (நெறியை)ப் பற்றி ஏதேனும் சந்தேகம் கொண்டிருந்தால் (தெரிந்து கொள்ளுங்கள்!) அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாருக்கெல்லாம் அடிபணிகின்றீர்களோ அவர்களுக்கு நான் அடிபணிவதில்லை. மாறாக, எந்த இறைவனின் பிடியில் உங்கள் மரணம் இருக்கிறதோ அந்த இறைவனுக்கு மட்டும் நான் அடிபணிகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.

105

وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

மேலும், ‘ஒருமனப்பட்டு இந்த தீனில் (நெறியில்) உம்மை முற்றிலும் நிலைப்படுத்திக் கொள்வீராக! மேலும், எந்நிலையிலும் இணை வைப்பவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்’ என்றும் நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.”

106

وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكَ وَلَا یَضُرُّكَ ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِیْنَ ۟

மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு உமக்குப் பலனளிக்கவும் கேடு விளைவிக்கவும் இயலாதவற்றிடம் நீர் பிரார்த்திக்காதீர். அவ்வாறு செய்வீராயின் அப்போது நீர் திண்ணமாக அக்கிரமம் செய்பவர்களுள் ஒருவராகி விடுவீர்.

107

وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ وَاِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

மேலும், ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடிமைகளில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்.

108

قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ

(நபியே!) நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்தியம் வந்துவிட்டது. ஆகவே, யாரேனும் நேரிய வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும். யாரேனும் வழிகெட்டுப்போனால் அவனுடைய வழிகேடு அவனுக்கே தீங்கினை அளிக்கும்! மேலும், உங்களின் எந்த விஷயத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன்.”

109

وَاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَاصْبِرْ حَتّٰی یَحْكُمَ اللّٰهُ ۖۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟۠

(நபியே!) வஹியின் வாயிலாக உமக்கு அனுப்பப்படுகின்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்பீராக! அல்லாஹ் தீர்ப்பு வழங்கும்வரை பொறுமையுடன் இருப்பீராக! மேலும், தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவனாவான்.

PreviousAt-TawbahNextHud

0:00–:––