الٓمّٓ ۟ۚ
அலிஃப், லாம், மீம்.
Surah 32
As-Sajdah
32. ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)
30 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
الٓمّٓ ۟ۚ
அலிஃப், லாம், மீம்.
تَنْزِیْلُ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
எவ்வித ஐயமுமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கின்றது.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
“இவர் சுயமாக இதனை இயற்றியுள்ளார்” என்று இம்மக்கள் கூறுகின்றார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமேயாகும்; அவர்களிடம் உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரும் வந்திருக்காத இந்தச் சமுதாயத்தினரை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! அவர்கள் அதன் மூலம் நேர்வழி பெறக்கூடும்!
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ وَّلَا شَفِیْعٍ ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟
அல்லாஹ் எத்தகையவன் எனில், வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் ஆறுநாட்களில் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். அவனைத் தவிர உங்களுக்கு பாதுகாப்பளிப்பவரும் யாரும் இல்லை. மேலும், அவனிடம் பரிந்துரை செய்பவரும் எவருமில்லை. இனியும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்களா, என்ன?
یُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَی الْاَرْضِ ثُمَّ یَعْرُجُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟
அவன் வானங்கள் முதல் பூமி வரை உலகின் எல்லாக் காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அந்நிர்வாகத்தைப் பற்றிய அறிக்கை ஒருநாள் அவனிடம் உயர்ந்து செல்கின்றது. அந்நாள் உங்கள் கணக்குப்படி ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
ذٰلِكَ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ
அவன்தான் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், வலிமை மிக்கவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
الَّذِیْۤ اَحْسَنَ كُلَّ شَیْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِیْنٍ ۟ۚ
அவன் படைத்த எந்த ஒரு பொருளையும் அழகாகவே படைத்துள்ளான். அவன் களிமண்ணிலிருந்து, மனிதனைப் படைக்கத் தொடங்கினான்.
ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۚ
பின்னர் அவனுடைய சந்ததிகளை அற்பமான நீரைப் போன்ற ஒருவித சத்திலிருந்து படைத்தான்.
ثُمَّ سَوّٰىهُ وَنَفَخَ فِیْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟
பிறகு, குறைபாடு இல்லாதவாறு அவனைச் சீரமைத்து அவனுள் தன்னுடைய உயிரை ஊதினான். மேலும், உங்களுக்குக் காதுகளையும், இதயங்களையும் கொடுத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
وَقَالُوْۤا ءَاِذَا ضَلَلْنَا فِی الْاَرْضِ ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬ بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ ۟
மேலும், “நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?” என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள்.
قُلْ یَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِیْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟۠
இவர்களிடம் கூறும்: “உங்கள்மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!”
وَلَوْ تَرٰۤی اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ ؕ رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ ۟
அந்தோ! இந்தக் குற்றவாளிகள் தலை குனிந்தவர்களாய்த் தம் இறைவன் திருமுன் நிற்கும் வேளையில் நீங்கள் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை அவர்கள் இப்படிக் கூறிக்கொண்டிருப்பார்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் நன்கு பார்த்துவிட்டோம்; கேட்டுவிட்டோம். எனவே, எங்களைத் திரும்ப அனுப்பி வைப்பாயாக நாங்கள் நற்செயல் புரிவதற்காக! இப்போது எங்களுக்கு உறுதி வந்துவிட்டது!”
وَلَوْ شِئْنَا لَاٰتَیْنَا كُلَّ نَفْسٍ هُدٰىهَا وَلٰكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّیْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟
(விடை பகரப்படும்:) “நாம் நாடியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியைக் காட்டி இருப்போம். ஆயினும், ‘ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரைக் கொண்டும் நான் நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறியிருந்த என்னுடைய வாக்கு நிறைவேறிவிட்டது!
فَذُوْقُوْا بِمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ۚ اِنَّا نَسِیْنٰكُمْ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
எனவே, இப்போது சுவையுங்கள், நீங்கள் இந்நாளின் சந்திப்பை மறந்துவிட்டிருந்ததற்கான விளைவை! நாமும் இப்போது உங்களை மறந்துவிட்டோம். மேலும், சுவையுங்கள் நிரந்தரமான வேதனையை, நீங்கள் செய்த தீயசெயல்களுக்குப் பகரமாய்!”
اِنَّمَا یُؤْمِنُ بِاٰیٰتِنَا الَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில், அவ்வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி, அறிவுரை கூறப்படும்போது அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து விடுகின்றார்கள். மேலும், இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்கள். மேலும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.
تَتَجَافٰی جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ یَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا ؗ وَّمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளைவிட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்! மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள்.
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِیَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْیُنٍ ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்.
اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا ؔؕ لَا یَسْتَوٗنَ ۟
நம்பிக்கையாளராய் இருப்பவர் பாவம் செய்தவர் போல ஆகிவிடுவாரா? இவ்விருவரும் சமமாக முடியாது!
اَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰی ؗ نُزُلًا بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு சுவனபதிகளில் தங்குமிடங்கள் உள்ளன; அவர்களை உபசரிப்பதற்கு! அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குப் பகரமாக!
وَاَمَّا الَّذِیْنَ فَسَقُوْا فَمَاْوٰىهُمُ النَّارُ ؕ كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِیْدُوْا فِیْهَا وَقِیْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟
மேலும், எவர்கள் பாவத்தைச் செய்கின்றார்களோ, அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்பும்போதெல்லாம் அதிலேயே தள்ளப்படுவார்கள். மேலும், அவர்களிடம் கூறப்படும்: “சுவையுங்கள், எந்த நரக வேதனையைப் பொய்யென்று கூறிக்கொண்டிருந்தீர்களோ அதே நரக வேதனையை!”
وَلَنُذِیْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰی دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
மேலும், அந்தப் பெரும் வேதனை வருமுன் இவர்களுக்கு இவ்வுலகில் (ஏதேனும் ஒரு சிறு) வேதனையை சுவைக்கக் கொடுப்போம்; இவர்கள் (தங்களது எதிர்ப்புப் போக்கைவிட்டு) விலகி விடக்கூடும் என்பதற்காக!
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا ؕ اِنَّا مِنَ الْمُجْرِمِیْنَ مُنْتَقِمُوْنَ ۟۠
மேலும், தன்னுடைய இறைவனின் வசனங்கள் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்ட பிறகும் அதனைப் புறக்கணித்துவிட்டவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? இத்தகைய குற்றவாளிகளை நாம் பழிவாங்கியே தீருவோம்!
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَلَا تَكُنْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآىِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
இதற்கு முன்பு நாம் மூஸாவுக்கு வேதம் வழங்கியிருந்தோம். ஆகையால், அதுபோன்ற வேதத்தை நீர் பெறுவதில் எவ்வித சந்தேகமும் உமக்கு வர வேண்டாம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا مِنْهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا ؕ۫ وَكَانُوْا بِاٰیٰتِنَا یُوْقِنُوْنَ ۟
மேலும், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, நம் வசனங்கள் மீது உறுதிப்பாடும் கொண்டிருந்தபோது அவர்களிலிருந்து தலைவர்களை நாம் தோற்றுவித்தோம். அவர்களோ நம் கட்டளையைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.
اِنَّ رَبَّكَ هُوَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
(இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்) தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த விஷயங்களில் திண்ணமாக உம் இறைவனே மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.
اَوَلَمْ یَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ یَمْشُوْنَ فِیْ مَسٰكِنِهِمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ ؕ اَفَلَا یَسْمَعُوْنَ ۟
இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்ற எத்தனையோ பல சமூகங்களை நாம் அழித்துவிட்டிருக்கின்றோம் (எனும் வரலாற்று நிகழ்ச்சியில்) இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் கிடைக்கவில்லையா, என்ன? அவர்கள் வசித்த அதே இடங்களில் இன்று இவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்! திண்ணமாக, இவற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. என்ன, இவர்கள் செவியுறுவதில்லையா?
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَی الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ ؕ اَفَلَا یُبْصِرُوْنَ ۟
மேலும், இவர்கள் (இக்காட்சியை ஒருபோதும்) பார்க்கவில்லையா, என்ன? வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் நீரை ஒலித்தோடச் செய்கின்றோம். அதே பூமியிலிருந்து பயிர்களை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களுடைய கால்நடைகளுக்கும் தீனி கிடைக்கின்றது; இவர்களும் உண்ணுகின்றார்கள்! இவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லையா, என்ன?
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
மேலும், இந்த மக்கள் கேட்கின்றனர்: “இந்தத் தீர்ப்பு எப்போது ஏற்படும்? நீங்கள் உண்மை கூறுபவர்களாயிருந்தால்!”
قُلْ یَوْمَ الْفَتْحِ لَا یَنْفَعُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِیْمَانُهُمْ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
இவர்களிடம் நீர் கூறும்: “தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்வது, நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது. மேலும், அவர்களுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்கப்படாது!”
فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ ۟۠
எனவே, இவர்கள் போக்கிலேயே இவர்களை விட்டுவிடும்; மேலும், எதிர்பார்த்திரும்; இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும்!