All Surahs

Surah 31

لقمان

Luqman

31. ஸூரத்து லுக்மான்

34 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓمّٓ ۟ۚ

அலிஃப், லாம், மீம்,

2

تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟ۙ

இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும்.

3

هُدًی وَّرَحْمَةً لِّلْمُحْسِنِیْنَ ۟ۙ

இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.

4

الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟ؕ

அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள்.

5

اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள்தாம் வெற்றி பெறுபவர்கள்.

6

وَمِنَ النَّاسِ مَنْ یَّشْتَرِیْ لَهْوَ الْحَدِیْثِ لِیُضِلَّ عَنْ سَبِیْلِ اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ ۖۗ وَّیَتَّخِذَهَا هُزُوًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான்! இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.

7

وَاِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا وَلّٰی مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا كَاَنَّ فِیْۤ اُذُنَیْهِ وَقْرًا ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟

அவனிடம் நம் வசனங்கள் ஓதிக்காண்பிக் கப்பட்டால், அவனுடைய காதுகளில் மந்தம் ஏற்பட்டிருப்பது போன்றும், அவற்றை அவன் கேளாதது போன்றும் தற்பெருமையுடன் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றான். எனவே, துன்புறுத்தும் வேதனை குறித்து அவனுக்கு நற்செய்தி கூறிவிடும்!

8

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِیْمِ ۟ۙ

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு அருள் நிறைந்த சுவனத்தோப்புகள் உள்ளன.

9

خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். மேலும், இது அல்லாஹ்வின் வலுவான வாக்குறுதியாகும். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

10

خَلَقَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَلْقٰی فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِكُمْ وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟

அவன் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான். மேலும், அவன் மலைகளை பூமியில் ஊன்றியுள்ளான்; அது உங்களோடு சேர்ந்து சரிந்துவிடக்கூடாது என்பதற்காக! மேலும் எல்லாவிதமான பிராணிகளையும் பூமியில் பரவச் செய்திருக்கின்றான். மேலும், வானிலிருந்து மழை பொழிய வைத்து பூமியில் விதவிதமான பயன்மிகு தாவரங்களை முளைக்கச் செய்தான்.

11

هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِیْ مَاذَا خَلَقَ الَّذِیْنَ مِنْ دُوْنِهٖ ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟۠

இவை யாவும் அல்லாஹ்வின் படைப்புகள்! இனி அவனை விடுத்து மற்றவர்கள் என்ன படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள்! உண்மை யாதெனில், அக்கிரமக்காரர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

12

وَلَقَدْ اٰتَیْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ ؕ وَمَنْ یَّشْكُرْ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟

நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம். நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத் தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.

13

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَهُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ ۟

மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்: “என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்”

14

وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰی وَهْنٍ وَّفِصٰلُهٗ فِیْ عَامَیْنِ اَنِ اشْكُرْ لِیْ وَلِوَالِدَیْكَ ؕ اِلَیَّ الْمَصِیْرُ ۟

மேலும், பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது.

15

وَاِنْ جَاهَدٰكَ عَلٰۤی اَنْ تُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِی الدُّنْیَا مَعْرُوْفًا ؗ وَّاتَّبِعْ سَبِیْلَ مَنْ اَنَابَ اِلَیَّ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நீ நடந்துகொள்! மேலும், யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவருடைய வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்.

16

یٰبُنَیَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِیْ صَخْرَةٍ اَوْ فِی السَّمٰوٰتِ اَوْ فِی الْاَرْضِ یَاْتِ بِهَا اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟

(மேலும், லுக்மான் கூறினார்:) “என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான்.

17

یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰی مَاۤ اَصَابَكَ ؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟ۚ

என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும்.

18

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ ۟ۚ

மேலும், மக்களைவிட்டு முகத்தைத் திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

19

وَاقْصِدْ فِیْ مَشْیِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ ۟۠

உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்.”

20

اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَسْبَغَ عَلَیْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ؕ وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟

நீங்கள் பார்க்கவில்லையா? வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், வெளிப்படையான மற்றும் மறைவான தன்னுடைய அருட்கொடைகளை உங்களுக்கு அவன் நிறைவாக்கித் தந்துள்ளான். (இவ்வாறிருந்தும்) மனிதர்களில் சிலர் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றார்கள்; எவ்வித ஞானமும், வழிகாட்டலும் அல்லது ஒளிதரும் வேதமும் அவர்களிடம் இல்லாமலேயே!

21

وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ الشَّیْطٰنُ یَدْعُوْهُمْ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟

“அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “இல்லை, எங்கள் மூதாதையர்களை எவ்வழியில் கண்டோமோ, அவ்வழியையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தாலுமா, இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்?

22

وَمَنْ یُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَی اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ؕ وَاِلَی اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟

மேலும், எவர் தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு தன்னை முற்றிலுமாக அல்லாஹ்விடம் ஒப்படைத்தாரோ அவர் உண்மையில் நம்பகமான உறுதியானதொரு பிடிமானத்தை இறுகப்பிடித்துக் கொண்டவராவார். மேலும், அனைத்து விவகாரங்களுடையவும் இறுதி முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.

23

وَمَنْ كَفَرَ فَلَا یَحْزُنْكَ كُفْرُهٗ ؕ اِلَیْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

இனி யாரேனும் நிராகரித்தால், அவனுடைய நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். எம்மிடமே அவர்கள் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது அவர்கள் என்ன செய்து விட்டு வந்துள்ளார்கள் என்பதை அவர்களுக்கு நாம் அறிவித்து விடுவோம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களை அறிந்தவனாக இருக்கின்றான்.

24

نُمَتِّعُهُمْ قَلِیْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰی عَذَابٍ غَلِیْظٍ ۟

சொற்ப காலம் உலகில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நாம் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு கடினமான ஒரு வேதனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக இழுத்துக் கொண்டுவருவோம்.

25

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று நீர் கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.

26

لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. திண்ணமாக, அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக் குரியவனுமாவான்.

27

وَلَوْ اَنَّمَا فِی الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ یَمُدُّهٗ مِنْ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

பூமியிலுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களானாலும், கடல் முழுவதும் (மையாகிவிட்டாலும்) அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்களின் மை அளித்து உதவினாலும்கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போகமாட்டா. திண்ணமாக அல்லாஹ் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான்.

28

مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟

மனிதர்களாகிய உங்களைப் படைப்பதும், பின்னர், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதும் (அவனைப் பொறுத்து) ஒரே ஓர் உயிரைப் (படைத்துப் பின்னர் உயிர் கொடுத்து எழுப்புவது) போன்றதேயாகும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.

29

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؗ كُلٌّ یَّجْرِیْۤ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்தான் இரவைப் பகலில் கோத்துக்கொண்டு வருகின்றான். பகலை இரவில் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், நீங்கள் செய்கின்றவற்றை, அல்லாஹ் நன்கு புரிந்தவன் (என்பதையும் நீங்கள் அறியவில்லையா?)

30

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُ ۙ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟۠

இவற்றிற்குக் காரணம் அல்லாஹ்தான் சத்தியமானவன் என்பதும், அவனைத் தவிர இவர்கள் வணங்குபவை அனைத்தும் அசத்தியமானவை என்பதும், மேலும், அல்லாஹ்வே உயர்ந்தவனாகவும் மேலானவனாகவும் இருக்கின்றான் என்பதுமேயாகும்!

31

اَلَمْ تَرَ اَنَّ الْفُلْكَ تَجْرِیْ فِی الْبَحْرِ بِنِعْمَتِ اللّٰهِ لِیُرِیَكُمْ مِّنْ اٰیٰتِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟

நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்வின் அருளினால் கப்பல் கடலில் செல்கின்றது; அவன் தன்னுடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், பொறுமையாளராகவும், நன்றி செலுத்துபவராகவும் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் அநேக சான்றுகள் உள்ளன.

32

وَاِذَا غَشِیَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ ۟

மேலும் (கடலில்) மலைகளைப் போன்ற அலை இவர்களைச் சூழ்ந்துகொண்டால், இவர்கள் தங்கள் தீனை மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே முற்றிலும் உரித்தாக்கியவர்களாய் அவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். பின்னர் அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்போது அவர்களில் சிலர் மிதமான போக்கைக் கைக்கொள்கின்றனர். வேறு யாரும் நம்முடைய சான்றுகளை மறுப்பதில்லை; பெரும் துரோகிகளையும், முற்றிலும் நன்றி கெட்டவர்களையும் தவிர!

33

یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا یَوْمًا لَّا یَجْزِیْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ ؗ وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَیْـًٔا ؕ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۥ وَلَا یَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟

மனிதர்களே! உங்கள் அதிபதியின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், ஒரு நாளைக் குறித்து அஞ்சுங்கள். அன்று எந்தத் தந்தையும் தன் மகனுக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. மேலும், எந்த மகனும் தன் தந்தைக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. நிச்சயமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், ஏமாற்றுக்காரனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.

34

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَیُنَزِّلُ الْغَیْثَ ۚ وَیَعْلَمُ مَا فِی الْاَرْحَامِ ؕ وَمَا تَدْرِیْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ وَمَا تَدْرِیْ نَفْسٌ بِاَیِّ اَرْضٍ تَمُوْتُ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟۠

(இறுதித் தீர்ப்புக்குரிய) அந்த வேளையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். அன்னையரின் கருவறைகளில் வளர்ந்து கொண்டிருப்பவை என்ன என்பதையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

PreviousAr-RumNextAs-Sajdah

0:00–:––