حٰمٓ ۟ۚ
ஹாமீம்.
Surah 46
Al-Ahqaf
46. ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)
35 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
حٰمٓ ۟ۚ
ஹாமீம்.
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
இந்த வேதம், வல்லமை மிக்கோனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டதாகும்.
مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا عَمَّاۤ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ ۟
நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம். ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள்.
قُلْ اَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ؕ اِیْتُوْنِیْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
(நபியே! இவர்களிடம்) கூறும்: இறைவனை விட்டுவிட்டு எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவை எப்படிப்பட்டவை என்று நீங்கள் எப்போதாவது கண்களைத் திறந்து பார்த்ததுண்டா? சற்று எனக்குக் காண்பித்துத் தாருங்கள். அவர்கள் பூமியில் எதையாவது படைத்திருக்கின்றார்களா? அல்லது வானங்களைப் படைத்து நிர்வகிப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், இதற்கு முன் வந்த ஏதேனும் வேதமோ அல்லது எஞ்சியுள்ள ஏதேனும் ஞானமோ (இந்தக் கொள்கைகளுக்கு ஆதாரமாக) உங்களிடம் இருப்பின் அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்.
وَمَنْ اَضَلُّ مِمَّنْ یَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا یَسْتَجِیْبُ لَهٗۤ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ وَهُمْ عَنْ دُعَآىِٕهِمْ غٰفِلُوْنَ ۟
பிறகு இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழிதவறியவன் யார் இருக்க முடியும்? அவன் அல்லாஹ்வை விடுத்து, மறுமைநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைக்கின்றான். அதுமட்டுமல்ல, அழைப்பவர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள்.
وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِیْنَ ۟
மேலும், மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும்போது தங்களை அழைத்தவர்களுக்கு அவர்கள் பகைவர்களாயும் ஆகிவிடுவார்கள்; மேலும், அவர்களின் வழிபாட்டை நிராகரிப்பவர்களாயும் இருப்பார்கள்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ؕ
நம்முடைய தெளிவான வசனங்கள் இம்மக்களிடம் ஓதிக்காட்டப்பட்டு, சத்தியம் இவர்கள் முன் வந்துவிட்டபோது இந்நிராகரிப்பாளர்கள் சத்தியத்தைக் குறித்து “இது வெளிப்படையான சூனியம்” என்று கூறுகின்றார்கள்.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِیْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ هُوَ اَعْلَمُ بِمَا تُفِیْضُوْنَ فِیْهِ ؕ كَفٰی بِهٖ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
என்ன, இவர்கள் “இறைத்தூதர் இதனைச் சுயமாகப் புனைந்துள்ளார்!” என்று கூறுகின்றார்களா? இவர்களிடம் கூறும்: “இதனை நான் சுயமாகப் புனைந்து கூறுகிறேன் எனில், இறைவனின் பிடியிலிருந்து சிறிதும் என்னை உங்களால் காப்பாற்ற முடியாது! நீங்கள் இட்டுக்கட்டும் பேச்சுக்களை அவன் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான். எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சியம் அளிப்பதற்கு அவனே போதுமானவன். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِیْ مَا یُفْعَلُ بِیْ وَلَا بِكُمْ ؕ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
இவர்களிடம் கூறும்: “இறைத்தூதர்களில் நான் ஒன்றும் புதுமையானவன் அல்லன். மேலும் (நாளை) எனக்கு என்ன நேரும் என்பதையும், உங்களுக்கு என்ன நேரும் என்பதையும் நான் அறியேன். என்னிடம் அனுப்பப்படும் வஹியைத்தான்* நான் பின்பற்றுகின்றேன். நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறல்லன்.”
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
(நபியே இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எப்போதேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாய் இருந்து, அதனை நீங்கள் நிராகரிக்கின்றீர்களெனில், (உங்கள் கதி என்னவாகும் என்று!) மேலும், இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்து சான்றுபகர்பவர் ஒருவர் இதுபோன்ற வேதத்தின் மீது சான்று பகர்ந்துள்ளார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்; ஆனால், நீங்கள் உங்களின் ஆணவத்திலேயே உழன்று கொண்டு இருந்தீர்கள். இத்தகைய கொடுமைக்காரர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை!”
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَیْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَیْهِ ؕ وَاِذْ لَمْ یَهْتَدُوْا بِهٖ فَسَیَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِیْمٌ ۟
இறைநிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி கூறுகிறார்கள்: “இந்த வேதத்தை ஏற்றுக் கொள்வது ஒரு நற்செயலாக இருந்திருந்தால் இதனை ஏற்றுக் கொள்வதில் இவர்கள் நம்மை முந்தியிருக்க முடியாது.” இப்படியாக இதன் மூலம் இவர்கள் நேர்வழி பெறாதபோது “இதுவோ பழைய பொய்!” என்று திண்ணமாகக் கூறுவார்கள்.
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟ۚ
இதற்கு முன்பு மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் வந்துவிட்டிருந்தது. இந்த வேதம் (அதனை) உண்மைப்படுத்தக்கூடியதாகவும், அரபிமொழியிலும் வந்துள்ளது; அக்கொடுமைக்காரர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் நல்ல நடத்தையை மேற்கொள்கிறவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காகவும்தான்!
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ
திண்ணமாக எவர்கள் “அல்லாஹ்தான் எங்கள் அதிபதி” என்று கூறினார்களோ பின்னர் அதில் அவர்கள் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
இத்தகையவர்களே சுவனம் செல்பவர்கள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்; (உலகில்) அவர்கள் செய்துகொண்டிருக்கின்ற செயல்களின் பலனாக!
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ اِحْسٰنًا ؕ حَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِیْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَاِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன. இறுதியில் அவன் தனது முழுபலத்தை அடைந்து அவனுக்கு நாற்பது வயது ஆகும்போது கூறுவான்: “என் அதிபதியே! நீ என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக! என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! மேலும், நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன். மேலும், கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் (முஸ்லிம்களில்) சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன்.”
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ نَتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَتَجَاوَزُ عَنْ سَیِّاٰتِهِمْ فِیْۤ اَصْحٰبِ الْجَنَّةِ ؕ وَعْدَ الصِّدْقِ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟
இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கின்றோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்திருப்பார்கள்.
وَالَّذِیْ قَالَ لِوَالِدَیْهِ اُفٍّ لَّكُمَاۤ اَتَعِدٰنِنِیْۤ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِیْ ۚ وَهُمَا یَسْتَغِیْثٰنِ اللّٰهَ وَیْلَكَ اٰمِنْ ۖۗ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۖۚ فَیَقُوْلُ مَا هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
ஒருவன் தன் தாய்தந்தையரிடம் இவ்வாறு கூறுகின்றான்: “சீ! என்னை நீங்கள் கஷ்டப்படுத்திவிட்டீர்கள். நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் ஏராளமான தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் எழுந்து வரவில்லையே!)” தாய்தந்தையர் இருவரும் அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாகக் கூறுகின்றார்கள்: “அட, துர்ப்பாக்கியமுடையவனே! ஏற்றுக்கொள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது!” ஆனால், அவனோ “இவையெல்லாம் முற்காலத்துக் கட்டுக் கதைகள்” என்று கூறுகின்றான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ؕ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟
இத்தகைய மக்கள் மீது வேதனையின் தீர்ப்பு உறுதியாகிவிட்டது. இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற இத்தகைய தவறான நடத்தை கொண்ட ஜின் மற்றும் மனித இனத்தாருடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஐயமின்றி, இவர்கள் மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டவர்களாய் இருக்கின்றார்கள்.
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا ۚ وَلِیُوَفِّیَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
(இந்த இரு பிரிவினர்களில்) அவரவருடைய செயல்களுக்கேற்பவே அவரவருடைய நிலைகள் இருக்கும். மேலும், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை அவர்களுக்கு முழுக்க முழுக்க அளித்திட வேண்டும் என்பதற்காகத்தான் (இவ்வாறு செய்கின்றான்). அவர்கள் மீது ஒருபோதும் கொடுமை இழைக்கப்படமாட்டாது.
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَیِّبٰتِكُمْ فِیْ حَیَاتِكُمُ الدُّنْیَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ فَالْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ۟۠
பின்னர் இந்த இறைநிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது அவர்களிடம் கூறப்படும்; நீங்கள் உங்கள் (பங்கில் உள்ள) அருட்கொடைகளை உங்கள் உலக வாழ்க்கையிலேயே முடித்துக் கொண்டீர்கள். அவற்றால் பயன் அடைந்துவிட்டீர்கள். நீங்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டிருந்ததற்கும், பாவம் செய்து கொண்டிருந்ததற்கும் பகரமாக இன்று உங்களுக்கு இழிவுமிக்க வேதனை கூலியாகத் தரப்படும்.
وَاذْكُرْ اَخَا عَادٍ ؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூத் நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறும். அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத்தாருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்திருந்தார் எச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள் அதாவது, “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிகப் பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்!”
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَتِنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்களை எங்கள் கடவுள்களை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி! நீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும்.”
قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖؗ وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
அவர் கூறினார்: “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால், அறியாமையில் மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கிறேன்.”
فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِیَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ؕ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ؕ رِیْحٌ فِیْهَا عَذَابٌ اَلِیْمٌ ۟ۙ
பின்னர், அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது கூறலாயினர். “இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” “இல்லை! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது புயல்காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை வந்து கொண்டிருக்கின்றது.
تُدَمِّرُ كُلَّ شَیْءٍ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا یُرٰۤی اِلَّا مَسٰكِنُهُمْ ؕ كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும்.” இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே, குற்றம்புரியும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.
وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِیْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِیْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً ۖؗ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَیْءٍ اِذْ كَانُوْا یَجْحَدُوْنَ ۙ بِاٰیٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
உங்களுக்கு நாம் தந்திடாத சிலவற்றை அவர்களுக்கு வழங்கி இருந்தோம். அவர்களுக்கு நாம், காதுகளையும், கண்களையும், இதயத்தையும் கொடுத்திருந்தோம். ஆனால், அவர்களின் காதுகளும், கண்களும் இதயமும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்! எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰی وَصَرَّفْنَا الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். நாம் நம்முடைய வசனங்களை பல தடவை அருளி அவர்களுக்கு விதவிதமாக விளக்கினோம்; அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக!
فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ بَلْ ضَلُّوْا عَنْهُمْ ۚ وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கான காரணமாகக் கருதிக்கொண்டு தமது கடவுளராக ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை? உண்மையாதெனில், அவர்கள் இவர்களைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள்! இதுவே, இவர்களின் பொய்யும் இவர்கள் இட்டுக்கட்டிய கொள்கையின் விளைவுமாகும்.
وَاِذْ صَرَفْنَاۤ اِلَیْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ یَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ ۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا ۚ فَلَمَّا قُضِیَ وَلَّوْا اِلٰی قَوْمِهِمْ مُّنْذِرِیْنَ ۟
(பின்வரும் நிகழ்ச்சியும் நினைவுகூரத்தக்கதாகும்:) ஒருபோது நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம் பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் பேசிக் கொண்டன: “மௌனமாய் இருங்கள்!” பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாய்த் திரும்பிச் சென்றனர்;
قَالُوْا یٰقَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْ بَعْدِ مُوْسٰی مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ یَهْدِیْۤ اِلَی الْحَقِّ وَاِلٰی طَرِیْقٍ مُّسْتَقِیْمٍ ۟
சென்று கூறினர்: “எங்களின் சமூகத்தாரே! நாங்கள் மூஸாவுக்குப் பின் இறக்கியருளப்பட்டிருக்கும் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்தின் பக்கமும் நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழிகாட்டுகின்றது.
یٰقَوْمَنَاۤ اَجِیْبُوْا دَاعِیَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.”
وَمَنْ لَّا یُجِبْ دَاعِیَ اللّٰهِ فَلَیْسَ بِمُعْجِزٍ فِی الْاَرْضِ وَلَیْسَ لَهٗ مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءُ ؕ اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
இன்னும், யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருடைய சொல்லை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வை) தோல்வியுறச் செய்திட எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கக் கூடிய எந்த ஆதரவாளர்களும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களாவர்.
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ یَعْیَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰی ؕ بَلٰۤی اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவனும் அவற்றைப் படைப்பதனால் களைப்புறாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு திண்ணமாக ஆற்றலுள்ளவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? ஆம்! புலப்படுகிறது. திண்ணமாக, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவனாயிருக்கின்றான்.
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَلَیْسَ هٰذَا بِالْحَقِّ ؕ قَالُوْا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன்னால் கொண்டு வரப்படும் நாளில், அவர்களிடம் வினவப்படும்: “இது சத்தியம் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம்! எங்கள் இறைவன்மீது ஆணையாக! இது உண்மையில், சத்தியம்தான்.” அல்லாஹ் கூறுவான்: “சரி! நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குப் பதிலாக இப்போது வேதனையைச் சுவையுங்கள்.”
فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ ؕ كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَ مَا یُوْعَدُوْنَ ۙ لَمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ بَلٰغٌ ۚ فَهَلْ یُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ ۟۠
எனவே (நபியே!) நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக; மனஉறுதிமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று! இவர்களின் விவகாரத்தில் அவசரப்படாதீர். இவர்களுக்கு எது பற்றி அச்சுறுத்தப்படுகின்றதோ அதை இவர்கள் கண்கூடாகப் பார்க்கும் நாளில் இவர்களுக்குப் புரிந்துவிடும்; ஒரு நாழிகையே அன்றி அதிகமாக உலகில் அவர்கள் தங்கியிருக்கவில்லை என்பது! செய்தி எடுத்துச்சொல்லப்பட்டு விட்டது; கீழ்ப்படியாத மக்களைத் தவிர வேறெவரேனும் இனி அழிவுக்குள்ளாக்கப்படுவார்களா, என்ன!