All Surahs

Surah 61

الصف

As-Saf

61. ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)

14 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தோன்; நுண்ணறிவாளன்!

2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்?

3

كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ ۟

நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்.

4

اِنَّ اللّٰهَ یُحِبُّ الَّذِیْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْیَانٌ مَّرْصُوْصٌ ۟

எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக அணிவகுத்து நின்று போர்புரிகின்றார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

5

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِیْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ ؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟

மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூக மக்களே! எனக்கு ஏன் துன்பம் அளிக்கின்றீர்கள்? நான் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக அனுப்பப்பட்ட தூதராவேன் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள்.” பின்னர் அவர்கள் கோணல் வழியை மேற்கொண்டபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களைக் கோணலாக்கிவிட்டான். மேலும், பாவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.

6

وَاِذْ قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ یَّاْتِیْ مِنْ بَعْدِی اسْمُهٗۤ اَحْمَدُ ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَیِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟

மர்யத்தின் குமாரர் ஈஸா இவ்வாறு கூறியதையும் நினைவு கூருங்கள்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் அல்லாஹ்வினால் உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் தூதராவேன். நான், எனக்கு முன்பே வந்துள்ள ‘தவ்ராத்’ வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றேன். மேலும், எனக்குப் பிறகு அஹமத் எனும் பெயருடைய ஒரு தூதர் வருவார் என்று நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கின்றேன்.” எனினும் அவர் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, இது வெளிப்படையான மோசடி என்று அவர்கள் கூறினார்கள்.

7

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُوَ یُدْعٰۤی اِلَی الْاِسْلَامِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்பவனைவிட கொடுமைக்காரன் வேறு யார்? அதுவும் இஸ்லாத்தின் பக்கம் (முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் பக்கம்) வருமாறு அவனுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில்! இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.

8

یُرِیْدُوْنَ لِیُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ ؕ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟

இவர்கள், அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும்; இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!

9

هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟۠

அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!

10

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰی تِجَارَةٍ تُنْجِیْكُمْ مِّنْ عَذَابٍ اَلِیْمٍ ۟

இறைநம்பிக்கைகொண்டவர்களே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடிய வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?

11

تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟ۙ

அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் ஜிஹாத்* செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

12

یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَیُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ۙ

அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், தோட்டங்களில் உங்களை நுழையச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிலைத்திருக்கும் சுவனங்களில் மிகச்சிறந்த இல்லங்களையும் உங்களுக்கு வழங்குவான். இதுவே மகத்தான வெற்றியாகும்.

13

وَاُخْرٰی تُحِبُّوْنَهَا ؕ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَتْحٌ قَرِیْبٌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟

மேலும், நீங்கள் விரும்பும் இன்னொன்றையும் உங்களுக்கு நல்குவான். அல்லாஹ்விடமிருந்து கிட்டும் உதவியும் அண்மையிலேயே கிடைக்கவிருக்கும் வெற்றியுமாகும் அது! (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்துவிடும்.

14

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ لِلْحَوَارِیّٖنَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآىِٕفَةٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَكَفَرَتْ طَّآىِٕفَةٌ ۚ فَاَیَّدْنَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلٰی عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِیْنَ ۟۠

இறைநம்பிக்கையாளர்களே மர்யத்தின் குமாரர் ஈஸா தம் சீடர்களை நோக்கி, “இறைவனின்பால் அழைப்பதில் எனக்கு உதவிபுரிபவர் யார்?” எனக் கேட்டபோது, “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளராக இருக்கின்றோம்” என சீடர்கள் மறுமொழி அளித்ததைப்போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளராகத் திகழுங்கள். அப்போது இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கைகொண்டார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரித்துவிட்டார்கள். பின்னர், நாம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவருக்கெதிராக உதவி நல்கினோம். மேலும் அவர்களே வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தார்கள்!

PreviousAl-MumtahanahNextAl-Jumuah

0:00–:––