All Surahs

Surah 66

التحريم

At-Tahrim

66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)

12 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یٰۤاَیُّهَا النَّبِیُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكَ ۚ تَبْتَغِیْ مَرْضَاتَ اَزْوَاجِكَ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

நபியே! அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கிய பொருளை நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? நீர் உம் மனைவியரின் திருப்தியை விரும்புகின்றீர் (என்பதற்காகவா?) அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான்.

2

قَدْ فَرَضَ اللّٰهُ لَكُمْ تَحِلَّةَ اَیْمَانِكُمْ ۚ وَاللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟

அல்லாஹ், நீங்கள் செய்யும் சத்தியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித் துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறிவாளன்!

3

وَاِذْ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعْضِ اَزْوَاجِهٖ حَدِیْثًا ۚ فَلَمَّا نَبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَیْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْ بَعْضٍ ۚ فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا ؕ قَالَ نَبَّاَنِیَ الْعَلِیْمُ الْخَبِیْرُ ۟

(மேலும், இந்த விவகாரமும் கவனிக்கத்தக்கதாகும்:) நபி தம்முடைய ஒரு மனைவியிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். பிறகு, அந்த மனைவி அதனை (வேறொருவரிடம்) தெரிவித்ததும் (அப்படி இரகசியம் வெளிப்பட்டதை) அல்லாஹ் நபியிடம் அறிவிக்கவும் செய்தபோது, அதில் சிலவற்றை அந்த மனைவியிடம் அவர் தெரியப்படுத்தினார். வேறு சிலவற்றைப் புறக்கணித்தார். பின்னர், (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் மனைவியிடம் தெரிவித்தபோது மனைவி கேட்டார், “தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்?” என்று! அதற்கு நபி பதிலளித்தார்: “அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான்.”

4

اِنْ تَتُوْبَاۤ اِلَی اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَیْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِیْلُ وَصَالِحُ الْمُؤْمِنِیْنَ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِیْرٌ ۟

நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி மீண்டால், (அது உங்களுக்கு சிறந்ததாகும்.) ஏனெனில், உங்களுடைய உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன. மேலும், இறைத்தூதருக்கு எதிராக நீங்கள் அணி சேர்ப்பீர்களானால் அறிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக, அல்லாஹ் அவருடைய பாதுகாவலனாக இருக்கின்றான். மேலும், அவனுக்கு அடுத்து ஜிப்ரீலும் சான்றோர்களான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும், அனைத்து வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாக இருக்கின்றார்கள்.

5

عَسٰی رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ یُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَیْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓىِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓىِٕحٰتٍ ثَیِّبٰتٍ وَّاَبْكَارًا ۟

நபி தம் மனைவியராகிய உங்கள் அனைவரையும் மணவிலக்கு செய்துவிடுவாராயின், உங்களுக்குப் பதிலாக உங்களை விடவும் சிறந்த மனைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கிவிடலாம். அவர்கள் வாய்மையான முஸ்லிம்களாய், இறைநம்பிக்கையுடையோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயினும் கன்னிகளாயினும் சரியே!

6

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِیْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓىِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது, கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.

7

یٰۤاَیُّهَا الَّذِیْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْیَوْمَ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠

அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்வதில்லை. அவர்களுக்கு எந்தக் கட்டளை இடப்பட்டாலும் அதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். (அப்போது கூறப்படும்:) “நிராகரிப்பாளர்களே! நீங்கள் இன்று எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாதீர்கள். நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்பவே உங்களுக்கு கூலி கொடுக்கப்படுகின்றது.”

8

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ یَوْمَ لَا یُخْزِی اللّٰهُ النَّبِیَّ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۚ نُوْرُهُمْ یَسْعٰی بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا ۚ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; தூய்மையான பாவமன்னிப்பு! விரைவில் அல்லாஹ் உங்கள் தீமைகளை உங்களைவிட்டு அகற்றவும் செய்யலாம்; மேலும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்படியான சுவனங்களில் உங்களைப் புகுத்தவும் செய்யலாம். அது எப்படிப்பட்ட நாளெனில், அன்று அல்லாஹ் தன்னுடைய தூதரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் இழிவுபடுத்த மாட்டான். அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப்பக்கத்திலும் பாய்ந்து கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறிக் கொண்டிருப்பார்கள்: “எங்கள் அதிபதியே! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கித் தருவாயாக! மேலும், எங்களை மன்னிப்பாயாக! திண்ணமாக, அனைத்தின் மீதும் நீ பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றாய்!”

9

یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟

நபியே! நிராகரிப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் போர்புரிவீராக! மேலும், அவர்களிடம் கடுமையாக நடப்பீராக! அவர்கள் போய்ச் சேருமிடம் நரகமாகும். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.

10

ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟

நூஹ் உடைய மனைவியையும் லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். எனினும், அவ்விரு வரும் தத்தம் கணவருக்கு துரோகம் செய்தனர். பிறகு, அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க இயலவில்லை (அவ்விருவரையும் நோக்கிக்) கூறப்பட்டது: “நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்.”

11

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَ ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِیْ عِنْدَكَ بَیْتًا فِی الْجَنَّةِ وَنَجِّنِیْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ

ஃபிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒருபோது அவர் இறைஞ்சினார்: “என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலைவிட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!”

12

وَمَرْیَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِیْنَ ۟۠

மேலும், இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம்.* மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார்.

PreviousAt-TalaqNextAl-Mulk

0:00–:––